ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க. ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வில் இருந்து சிலர் தூது விட்டார்கள்- முக ஸ்டாலின்

ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க. ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வில் இருந்து சிலர் தூது விட்டார்கள்- முக ஸ்டாலின்

ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க. ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வில் இருந்து சிலர் தூது விட்டார்கள் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாகர்கோவில்:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார பயணத்தை நடத்தி வருகிறார்.

குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி மக்களின் குறைகளை கேட்க இன்று அவர் நாகர்கோவில் வந்தார். ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.

பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

ஸ்டாலின் பேசுகையில், “உங்கள் மாவட்டத்தைத்தான் இந்தியாவின் மகத்தான அடையாளமாக சொல்லப்படுகிறது. வடக்கே இமயமும், தெற்கே குமரியும் அடையாளமாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட முக்கடலில் தமிழ் ஆசான் வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் சிலை வைத்து, அதை தமிழ் கடலாக மாற்றியவர் கருணாநிதி.

இந்தியாவில் ஒரு சுதந்திர போராட்டம் நடந்தபோது தென்குமரியில் இரண்டு சுதந்திர போராட்டங்கள் நடந்தது.

கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம் ஆகியவற்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என பல தியாகிகள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள்.

எல்லை தியாகிகளுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் சலுகை வழங்கியது கருணாநிதி ஆட்சி. இந்திய போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், எல்லைப்போர் தியாகிகள் அனைவரையும் போற்றியது கருணாநிதி அரசு.

கருணாநிதியும், அண்ணாவும் தமிழகத்துக்காக, தமிழ் இனத்துக்காக, தமிழர்களுக்காக ஆட்சியை நடத்தினார்கள். இத்தைகைய ஆட்சி தான் விரைவில் அமைய இருக்கிறது.

சிலர் அமைச்சர்கள் ஆக வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வர நினைக்கும் கட்சி அல்ல தி.மு.க. நானோ மற்றவர்களோ பதவிக்காக அலைபவர்கள் அல்ல. என்பதை தொண்டர்களும் தமிழக மக்களும் அறிவார்கள்.1966முதல் கழக, பொதுப்பணி ஆற்றிவருகிறேன். ஆனாலும் 1984ல் தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது நீங்கள் அமைச்சர் ஆக போகிறீர்களா என நிருபர்கள் கேட்டார்கள். நான் அமைச்சர் ஆக விரும்ப வில்லை என கலைஞரிடம் சொல்லிவிட்டதாக சொன்னேன். இளைஞர்அணி செயலாளரான ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பீர்களா என கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு, அமைச்சர் ஆகக்கூடிய எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஆனால் என் மகன் என்ற காரணத்தால் அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று கூறிவிட்டார். மகன் என்பதற்காக என்னை அரசியலில் வளர்த்தவர் அல்ல கருணாநிதி.

அவர் மகன் என்பதற்காக நான் உழைக்காமலும் இருக்கவில்லை. லட்சோப லட்சம் தொண்டர்கள் இந்த இயக்கத்தில் என்னை எற்றுக்கொள்வதற்கான காரணம் நான் உழைத்த உழைப்புதான்.

2002ல் எனக்காக ஒரு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். சென்னை மேயர் பதவி, எம்.எல்.ஏ பதவியில் இருந்ததால் ஒருவர் இரண்டு பதவியில் இருக்கக்கூடாது என தனிச்சட்டத்தை ஜெயலலிதா நிறைவேற்றினார். அதை நான் எதிர்க்கவில்லை.

உடனே நான் மேயர் பதவியை விட்டு விலகினேன். மக்களுக்கு சேவை ஆற்றதான் பதவியே தவிர, எனது தனிப்பட்ட உயர்வுக்காக பதவி அல்ல.

ஜெயலலிதா இறந்த பிறகு அ.திமு.க.வில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றார்கள். அ.தி.மு.கவில் இருந்தும் சிலர் தூது விட்டார்கள். அவர்களைப்பற்றிச் சொல்ல விரும்பவில்லை. அப்படி ஆட்சி அமைத்தால் அது தி.மு.க அரசாக இருக்காது.

கோடிகணக்கான மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது விரைவில் அமைய உள்ளது. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தி.மு.க ஆட்சி அமைய உள்ளது. இன்று நடப்பது பாதி அ.தி.மு.க, பாதி பா.ஜ.க ஆட்சி. எல்லாவற்றையும் அரைகுறையாக செய்துகொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து என தீர்மானம் போடுவார்கள், ஆனால் நீட் தேர்வு இருக்கும். ஏழுபேர் விடுதலைக்கு ஆதரவாக தீர்மானம் போடுவார்கள், ஆனால் அவர்கள் ஜெயிலில் இருபார்கள்.

இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் போடுவார்கள், ஆனால் இந்தி திணிப்பு நடந்துகொண்டே இருக்கும். மாநில உரிமை, மாநில நிதி கேட்டு மனு கொடுப்பார்கள் எதுவும் கிடைக்காது. எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவார்கள் ஆனால் ஒரு செங்கல் கூட வைக்கமாட்டார்கள். பழனிச்சாமி தன்னை முதல்வர் என்பார் ஆனால் அமைச்சர்கள் யாரும் மதிக்கமாட்டார்கள்.

பழனிச்சாமி தனது கடுப்பாட்டுக்குள் அ.தி.மு.க இருப்பதாக காட்டிக்கொள்வார். ஆனால் பழனிச்சாமியை பன்னீர் செல்வம் கூட முன்மொழிய மாட்டார்.

அ.தி.முக அரசு நாட்டை கெடுத்து வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட திமுகவிற்கு முழுமையான வெற்றியை தாருங்கள். குமரி மாவட்டம் கடந்த முறை தேர்தலில் முழுமையான வெற்றியை கொடுத்தீர்கள். இந்த முறையும் அதுபோன்ற வெற்றியை கொடுங்கள்.

இன்று உங்கள் எழுச்சியை பார்க்கும்போது முழுமையான வெற்றியை தருவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் அளித்தது உங்கள் கோரிக்கை அல்ல என்னுடைய கோரிக்கை.

உங்கள் இதயங்களை நான் கொண்டு செல்கிறேன். கலைஞர் மரணத்தின்பொது அண்ணா அருகில் அடக்கம் செய்ய இடம் கொடுக்காத நயவஞ்சகர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan