தடை செய்யப்பட்டவை காண்பிக்கப்பட்டிருந்தால் தவறானது – விவசாய சங்க தலைவர் திகாய்த்

தடை செய்யப்பட்டவை காண்பிக்கப்பட்டிருந்தால் தவறானது – விவசாய சங்க தலைவர் திகாய்த்

விவசாயிகள் நேற்று நடத்திய சாலைமறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில் கட்டப்பட்டிருந்த கொடி சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நேற்று நாடு முழுவதும் நெடுஞ்சாலை மறியல் (சக்கா ஜாம்) போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தின்போது விவசாயிகள் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். விவசாய சங்கங்களின் கொடிகள் மற்றும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். டிராக்டர்களிலும் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. 

இதற்கிடையே, லூதியானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான பிந்த்ரன்வாலே தோற்றத்தை ஒத்த படத்துடன் கூடிய கொடி கட்டப்பட்டிருந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிராக்டரில் கட்டப்பட்டிருந்த கொடி தொடர்பான காணொளி வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுியது. 

காலிஸ்தான் நாடு கோரி ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள் 1982-ம் ஆண்டு ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையில் பஞ்சாப் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்து இயங்கத் தொடங்கினர். 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவம் மேற்கொண்ட ப்ளூ விண்மீன் ஆபரேசனில், பிந்த்ரன்வாலே மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த், அங்குள்ளவர்களுடன் நாங்கள் பேசுகிறோம். அது உண்மையாக இருந்தால், அது தவறு. அப்படி செய்யக்கூடாது. ஏதாவது தடை செய்யப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan