கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியது

கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியது

10 மாதங்களுக்கு பிறகு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியது.

சென்னை:

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து கணினிமய வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.

இந்த நிலையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அனைத்து மாணவர்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்து இருந்தது.

கல்லூரிகளைப் பொறுத்தவரையில் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்தலாம் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

இதற்கான பணிகளில் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஈடுபட்டு, மாணவ-மாணவிகள் பாதுகாப்பான முறையில் வகுப்புகளுக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.

இந்நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன.

ஆனால் சில கல்லூரிகள், ஏற்கனவே நடத்தப்பட்டுவரும் கணினிமய வகுப்புகளையே தொடர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan