ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி தெலுங்கானாவில் புதிய கட்சி தொடக்கம்?

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி தெலுங்கானாவில் புதிய கட்சி தொடக்கம்?

ஆந்திரபிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா, தனது தந்தையும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களுடன் ஐதராபாத்தில் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

ஐதராபாத்:

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் முதல்-மந்திரியாக 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இருந்தவர், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவர் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு உலங்கூர்தி விபத்தில் இறந்தபிறகு அரசியலுக்கு வந்த மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி ஆந்திராவில் ஆட்சியையும் பிடித்துவிட்டார்.

அவரது சகோதரியான ஒய்.எஸ்.சர்மிளா, கடந்த 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலுக்குப் பின் அவர் பொதுவெளியில் அதிகம் தென்படவில்லை.

ஆனால் தெலுங்கானாவில் சர்மிளா புதிய கட்சி தொடங்கப்போவதாக சமூக ஊடகங்களில் சமீப சிலநாட்களாக தகவல்கள் வலம்வந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில், ஒன்றுபட்ட நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த, ராஜசேகர ரெட்டியின் அனுதாபிகள், ஆதரவாளர்களை ஐதராபாத்தில் உள்ள தங்கள் குடும்ப வீட்டில் சர்மிளா நேற்று சந்தித்துப் பேசினார்.

ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்-மந்திரியாக ராஜசேகர ரெட்டி இருந்ததால், அவரது அனுதாபிகள், ஆதரவாளர்கள் தெலுங்கானாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் அங்கு ‘ராஜண்ணாவின் ராஜ்ஜியத்தை’ (ராஜசேகர ரெட்டியின் ஆட்சி) கொண்டுவர விரும்புகின்றனர். அதை பின்னணியாகக் கொண்டு தெலுங்கானாவில் சர்மிளா புதிய கட்சி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கட்சி தொடங்கப்போகிறீர்களா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காத சர்மிளா, ‘தெலுங்கானாவில் ராஜண்ணா ராஜ்ஜியம் தற்போது இல்லை. அதை ஏன் கொண்டுவரக் கூடாது?’ என்று மட்டும் கேட்டார். தெலுங்கானாவின் தற்போதைய கள நிலவரம் குறித்து சில தலைவர்கள், தொண்டர்களின் கருத்தை மட்டும் அறிந்ததாகக் கூறிய அவர், இதுபோல ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த அனுதாபிகளையும் சந்திக்கப் போவதாகத் தெரிவித்தார்.

சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலையீடு இன்றியே சர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக கூறப்படுகிறது. அவர் ஆலோசனை நடத்திய குடும்ப வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் ராஜசேகர ரெட்டி, சர்மிளாவின் படங்கள் காணப்பட்டன. ஆனால் ஒன்றில்கூட ஜெகன்மோகன் ரெட்டியின் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan