பிரதமர் மோடி தமிழகத்தில் 3 கட்ட தேர்தல் பிரசாரம்

பிரதமர் மோடி தமிழகத்தில் 3 கட்ட தேர்தல் பிரசாரம்

பிரதமர் மோடி தமிழகம் வரும்போது நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்பது உறுதி. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. என்றாலும், தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பா.ஜனதா தமிழ்நாட்டில் தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதில் மாநில தலைவர் அதிக அக்கறை எடுத்து வருகிறார்.

பா.ஜனதாவை தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வளர கட்சியின் மேலிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடியும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

பிரதமர் மோடி தனது உரையில் திருக்குறள், பாரதியார் கவிதை போன்றவற்றை குறிப்பிட்டு பேசுகிறார். எனவே, அவரது தமிழக சுற்றுப்பயணம் தமிழக மக்களிடம் தனி எழுச்சியை ஏற்படுத்தும் என்று பா.ஜனதாவினர் நம்புகிறார்கள். வருகிற 14-ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

பிரதமரின் முதல் நிகழ்ச்சியை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விழாவாக நடைபெறும். இதில் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அர்ஜுன் மார்க்-2’ என்னும் புதிய வகை பீரங்கியை மோடி அறிமுகம் செய்கிறார்.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ தொடர் வண்டி சேவையையும் தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4-வது தொடர் வண்டி பாதை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய தொடர் வண்டி பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கிறார். இவை தவிர சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சி உள்பட 5 நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வர அதிக அக்கறை காட்டுகிறார். தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில், 15 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டன. இவற்றை பிரதமரின் அறிவுறுத்தலின்படி தலா 5 நிகழ்ச்சிகளாக மாற்றி 3 முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் 3 முறை தமிழகம் வருகிறார். முதல் நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி சென்னையில் நடைபெறுவது உறுதியாக விட்டது.

அடுத்து நடைபெறும் விழாக்களை கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடத்த பரிசீலனை நடந்து வருகிறது. அரசு சார்பில் நடைபெறும் பிரதமரின் 3 நிகழ்ச்சிகளிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார். சில மத்திய மந்திரிகளும் இதில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் உரையாற்றுகிறார். இது காணொலி காட்சிகளாக ஒளிபரப்பப்படுகிறது.

இதற்கான திட்டமிடல் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்படும் முடிவின்படி பிரதமரின் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு பிரதமர் 3 முறை தமிழகம் வரும்போது பிரசார கூட்டங்களிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. பிரதமரின் ஒப்புதல் கிடைத்த பிறகு பிரசார கூட்டம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

பிரதமர் தமிழகம் வரும்போது நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்பது உறுதி. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா தலைவர்கள் செய்து வருகிறார்கள். பிரதமரின் வருகை தமிழக பா.ஜனதாவினரை உற்சாகப்படுத்தி உள்ளது என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan