மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபிடாவ்:

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் அரசாணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவையும் மீறி, நேற்று முன்தினமும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைநகர் நேபிடாவில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதனைத் தொடர்ந்து ரப்பர் குண்டுகளால் சுட்டனர். அதன் பின்னரும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை எனவும், போராட்டக்காரர்களை எச்சரிக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் போலீசாரின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் நேற்றும் மியான்மர் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan