உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படாவிட்டால் சமூக வலைத்தளங்கள் மீது கடும் நடவடிக்கை

உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படாவிட்டால் சமூக வலைத்தளங்கள் மீது கடும் நடவடிக்கை

உள்நாட்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டு செயல்படாவிட்டால் சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி:

சமீபத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்து வன்முறையை தூண்டும்வகையில் பதிவுகளை வெளியிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட கணக்குகளை நீக்குமாறு ‘டுவிட்டர்’ நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியது. இதை பின்பற்றாவிட்டால், அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

சில நாட்கள் இழுத்தடிப்புக்கு பிறகே 500 கணக்குகளை ‘டுவிட்டர்’ நீக்கியது.

இந்தநிலையில், நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது துணை கேள்விகளுக்கு மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

சமூக வலைத்தளத்தில் கருத்து சுதந்திரத்தை மத்திய அரசு மதிக்கிறது. ஆனால், பொய் செய்தியை பரப்பினாலோ, வன்முறையை தூண்டினாலோ அல்லது தேர்தல்களில் தலையிட்டு செல்வாக்கு செலுத்த முயன்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது.

சமூக வலைத்தளத்தை நடத்தும் நிறுவனங்கள், நியாயமான முறையில் நடக்க வேண்டும். அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் கூட சில சர்ச்சை பதிவுகள் தொடர்பாக ‘டுவிட்டர்’ நிர்வாகத்திடம் மத்திய அரசு முறையிட்டது.

அதுபோல், செய்தி சேனல்களில் வரும் பொய்ச்செய்திகள் தொடர்பாகவும் மத்திய அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அரசு, பத்திரிகை சுதந்திரத்துக்காக போராடியவர்கள் தலைமையிலான அரசு.

பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் என பலரும் நெருக்கடி நிலையின்போது போராடி இருக்கிறோம். தனிநபர் சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan