சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து- பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து- பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆலையில் இருந்த 15 அறைகள் தரைமட்டமாயின.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வந்தன.

இங்கு அன்பின்நகரம், ஏழாயிரம் பண்ணை, படந்தால், மேட்டுப்பட்டி, மார்க்கநாதபுரம், அச்சன்குளம், சல்வார்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலை செய்துவந்தனர்.

நேற்று 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். இந்தநிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன.

அந்த அறைகளில் பணியாற்றிய பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டும், உடல் கருகியும் பிணமாக கிடந்தனர். மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களும், ஆலையில் மற்ற அறைகளில் பணியாற்றியவர்களும் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.

உயிருக்கு போராடியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு, சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலியானவர்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சம்பவத்தில் 17 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வெடிவிபத்தில் பலியானவர்களின் உடல்கள் மிகவும் சிதைந்து போயும், கருகியும் இருந்ததால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பலியான 17 பேரில், காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-

1. அன்பின்நகரை சேர்ந்த சந்தியா (வயது20).

2. மார்க்கநாதபுரம் சின்னதம்பி (34).

3. மேலப்புதூர் நேசமணி (38).

4. நடுசூரக்குடி கற்பக வள்ளி (22).

5. ஓ.கோவில்பட்டி ரெங்கராஜ் (57).

6. சத்திரப்பட்டி ரவிச்சந்திரன் (58).

மற்றவர்களின் உடல்களை அடையாளம் காண காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

காயம் அடைந்தவர்களில் 26 பேர் சாத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அச்சன்குளம் பட்டாசு ஆலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் நிகழ்ந்த வெடி விபத்தால் ஏற்பட்ட பயங்கர சத்தம் சுற்றும்முற்றும் பல கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டு்ள்ளது. அந்த ஆலையில் இருந்த பல அறைகள் தரைமட்டமாகின.

தீப்பிடித்து எரிந்ததால் தொடர்ந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறிய வண்ணமாக இருந்தது. சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை முழுவதுமாக அணைக்க 4 நேரம் பிடித்தது.

பலியானவர்கள் குறித்து காவல் துறையினர் கூறும் போது, “பட்டாசு ஆலை வேலைக்கு வந்தவர்கள் பற்றிய வருகை பதிவேடு எதுவும் ஆலை நிர்வாகத்தால் சரிவர பின்பற்றப்படவில்லை. இதனால் யார்-யார் நேற்று பணிக்கு வந்தனர் என்ற விவரத்தை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பணியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடிமருந்து உராய்வு காரணமாக இந்த கோர விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த வெடிவிபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்பட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிவிபத்தினால் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் சோகத்தில் மூழ்கின. பட்டாசு ஆலை வேலைக்கு வந்தவர்களை பிணமாகவும், படுகாயத்துடனும் மீட்டெடுத்து ஆம்புலன்சில் ஏற்றிய காட்சிகளை பார்த்து பெண்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பலியானவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்தும், கருகியும் இருந்ததும் சோகத்திலும் சோகம் ஆகும்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan