123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்

123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.

கோவை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அதன்படி கோவை-சிறுவாணி ரோடு பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் 123 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 123 ஜோடிகளுக்கும் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இதில் திருமண ஜோடிகளின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சூட்கேஸ், கியாஸ் ஸ்டவ், சில்வர் குடம், குக்கர் உள்பட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

திருமணம் முடிந்ததும் கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு எடுக்கிறார். பின்னர் அவர், கொடிசியாவில் கிறிஸ்தவ ஜனநாயக சங்கம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கிறார்.

இதையடுத்து அவர், நாமக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக இரவு 9.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan