தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கும்: தொற்று நோயியல் நிபுணர் தகவல்

தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கும்: தொற்று நோயியல் நிபுணர் தகவல்

தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கும். அவரிடம் இருந்து பலருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவும் என்று தொற்று நோயியல் நிபுணர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பெங்களூரு

பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் பிரிவு டாக்டரான தொற்று நோயியல் நிபுணரும், கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினருமான மருத்துவர் ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கும். ஆனால் நோய் பாதிப்புகள் ஏற்படாது. அதாவது காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வராது. ஆனால் அவரிடம் இருந்து பலருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவும். அதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், நமது வாழ்க்கையின் இறுதி வரை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

பொதுவாக ஒரு நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்க நீண்ட காலம் ஆகும். ஆனால் கொரோனா தடுப்பூசி 10 மாதங்களில் வெளிவந்துள்ளது. இதன் நோயை கட்டுப்படுத்தும் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை. 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் பிறகு அந்த விவரங்கள் தெரியவரும். ஆயினும் நமக்கு குறைந்த காலக்கட்டத்தில் தடுப்பூசி கிடைத்திருப்பது பெரிய விஷயம்.

புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசை கண்டறியும் சோதனை நிமான்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. 86 பேருக்கு அந்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 25 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 25 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நிமான்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 220 வகையான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இருப்பது தெரியவந்தது. கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. பெங்களூருவில் சில பகுதிகளில் திடீரென கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அதிகரித்துள்ளது. இது 2-வது அலை தொடக்கத்தின் அறிகுறியா? என்று இப்போதே சொல்ல முடியாது.

இவ்வாறு ரவி கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan