மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து சென்னையில் தொழில் அதிபர்களுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல்

மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து சென்னையில் தொழில் அதிபர்களுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல்

மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து சென்னையில் நேற்று தொழில் அதிபர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.

சென்னை:

2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்த பின்னர் முதல் முறையாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை வந்தார்.

அவர், மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து நேற்று மதியம் 1.15 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரும், நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன், டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், டி.வி.எஸ். குழும இணை இயக்குனர் தினேஷ், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி உள்பட 40-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் கருத்துகளை கேட்டறிந்தார். தொழிலதிபர்கள் ஒவ்வொருவரும், தொழில் வளர்ச்சிக்கு மத்திய வரவு செலவுத் திட்டம் எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு இது மிகச் சிறந்த வரவு செலவுத் திட்டம் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த வரவு செலவுத் திட்டம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்றும் தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று, வரவு செலவுத் திட்டம் அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தாமதம் கூடாது என்றும், அவ்வாறு தாமதம் ஆவது தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்றும் தெரிவித்த தொழிலதிபர்கள், வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டமைப்புக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தினால் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறினர்.

அதைத் தொடர்ந்து, கருத்துகள், ஆலோசனைகள் கூறிய தொழிலதிபர்களுக்கு நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.

பின்னர், அவர்களது ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படும் என்றும், அவற்றை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழிலதிபர்களிடம் அவர் உறுதி அளித்தார்.

மதியம் 3.15 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan