5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு பற்றி அமித்ஷா ஆலோசனை

5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு பற்றி அமித்ஷா ஆலோசனை

5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தது பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்தது. பலி எண்ணிக்கையும் சரிந்து வந்தது.

இதற்கிடையே, மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. உருமாறிய கொரோனாவின் தாக்கமும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் இரு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து அமித்ஷா ஆய்வு செய்தார். குறிப்பாக, 5 மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவது பற்றி கேட்டறிந்தார்.

கொரோனா மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசி பணிகள் பற்றியும் அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan