எகிப்து – ஏரியில் படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

எகிப்து – ஏரியில் படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் சிறுவர்கள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கெய்ரோ:

எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிரியாவில் மரியட் என்கிற மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி பிரபலமானதாகும். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். மேலும் இந்த ஏரியில் தீவு ஒன்றும் உள்ளது. சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து அந்த தீவுக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் படகு ஒன்றில் மரியட் ஏரியில் உள்ள தீவுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கரைக்கு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏரியில் படகு கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.‌ இதுபற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.‌ ஆனால் அதற்குள் பெண்கள் சிறுவர்கள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் இந்த விபத்தில் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.‌ இருப்பினும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan