Press "Enter" to skip to content

உழவர் சந்தை மீண்டும் வருகிறது- ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் தயார்: ஆளுநர் உரையில் அறிவிப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் பெயரில் ரூ.70 கோடி செலவில் மதுரையில் சர்வதேச தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சென்னை:

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.

ஆட்சிக்கு வந்த பின்பு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டு இருந்தார்.

இதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.58 மணியளவில் கலைவாணர் அரங்குக்கு வந்தார்.

அவரை சபாநாயகர் அப்பாவு வாசலில் நின்று வரவேற்று சட்டசபைக்கு அழைத்து வந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் வருவதற்கு முன்பு சட்டசபைக்குள் வந்து அமர்ந்திருந்தனர்.

ஆளுநர் சட்டசபைக்குள் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது ஆளுநர் கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடியே தனது இருக்கையை நோக்கி வந்தார்.

சரியாக 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆளுநர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து தனது உரையை வாசித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் கூறியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக்கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும்.

2016-ம் ஆண்டில் நடைபெற இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு, அனைத்து வகையிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர் கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்த தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஊரக வீட்டு வசதி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு, சாலை வசதி, நீர் நிலைகளை மறு செறிவூட்டல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்குவது இந்த அரசின் தலையாய முன்னுரிமையாக இருக்கும்.

கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏழை எளியோருக்கான வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பதில் இந்த அரசு கவனம் செலுத்தும். வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காகக் கண்டறியப்பட்டுள்ள அனைத்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்.

சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைகளை பெற்று தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி அத்தகைய சட்டங்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் பெயரில் ரூ.70 கோடி செலவில் மதுரையில் சர்வதேச தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்படும். கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும், பழங்களும் விற்பனை செய்யப்பட்டன.

பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி, தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மண்டலம் வாரியான திட்டங்கள் வசூலிக்கப்படும்.

அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு, சென்னைக்கான மூன்றாவது பெருந்திட்டத்தை தயாரிக்கும் உரிய காலமான 2026-ம் ஆண்டிற்கு முன்னரே அப்பணி முடிக்கப்படும்.

சென்னைக்கு அருகில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, மாநகர எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இணைக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படை கட்டமைப்புகளில் இன்னும் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

எனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் இந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். முதல்-அமைச்சர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை ‘சிங்காரச் சென்னையாக’ மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த வகையில், சென்னையில் மாநகர கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் குடிமக்களுக்கு சேவைகளை சிறப்பாக வழங்கவும், ஒரு புதிய மாதிரித் திட்டம் உருவாக்கப்படும்.

வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ள நீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய ‘சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக்குழு’ அமைக்கப்படும்.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »