Press "Enter" to skip to content

மகாத்மாவை அடையாளம் காட்டிய மதுரை மாநகரம்

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறி 100 ஆண்டுகள் ஆகிறது. காந்தியடிகளை அடையாளம் காட்டியது தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரைதான்.

காந்தியடிகளின் வாழ்க்கையில் போர்பந்தர், சபர்மதி, மதுரை ஆகிய 3 இடங்கள் முக்கியமானவை. 1921 செப்டம்பர் 21-ந்தேதி ரெயிலில் மதுரைக்கு வந்த காந்திக்கு வழி நெடுக ஆரவார வரவேற்பு. திரண்டு இருந்த மக்களில் அநேகமாக எல்லாருமே விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானியர்கள். இடுப்பில் ஓர் அரைத்துண்டு மட்டுமே கட்டி இருந்தனர். ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்..?’ இல்லாமை.

‘இந்தியாவில் மிகப்பெரும்பான்மை மக்கள் வறிய நிலையில்தான் இருக்கிறார்கள்; தன்னை நம்பி பின்தொடரும் மக்களுக்கு, இரண்டு முழம் துணிக்குக்கூட வழி இல்லை’. மதுரை மேலமாசி வீதியில் தங்கி இருந்த காந்திக்கு, இரவு முழுக்க மன வேதனை; முடிவு செய்தார். மறுநாள் காலை ‘அரை ஆடை’ அணிந்தபடி வெளியில் வந்தார். உணவு, உடை, உறைவிடம்-மனிதனின் அடிப்படை தேவைகள். தன் உணவிலும், தங்கும் இடத்திலும் ஏற்கனவே சிக்கனத்தை கடைப்பிடித்து வந்த காந்திக்கு, உடை சிக்கனம் மட்டும் இயலாமலே இருந்தது. இரண்டு முறை இதனை செயல்படுத்த எண்ணியும் நிறைவேறாமல் போயிற்று. மதுரை மாநகர்தான் காந்தியடிகளுக்கு மாற்றத்துக்கான மன உறுதியைத் தந்தது.

காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய அந்த நாள் செப்டம்பர் 22-ந்தேதி 1921-ம் ஆண்டு. ஒரு மனிதரை மகாத்மாவாக உயர்த்திய மதுரை சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகளின் நிறைவில் இன்று, அரை ஆடைதான் காந்தியின் அடையாளமாய் நிற்கிறது. தகவல் தொடர்புச்சாதன வசதிகள் ஏதும் இல்லாத நாட்களில் காந்தியடிகள் சென்ற இடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இருந்தார்களே காந்தி சொல்லை மீறுவதற்கு ஆங்கில ஆட்சியாளர்கள் அஞ்சினார்களே இந்த அதிசயத்தின் பின்னால் அவர் அணிந்த அரை ஆடையின் பங்கு மகத்தானது.

அரசியல் விடுதலையுடன், சாமானியர்களின் சமூகப்பொருளாதார விடுதலையும் காந்தியின் லட்சியமாய் இருந்தது. இதற்கும் மதுரையே சாட்சி. சமூக விடுதலையின் ஆதாரமாக அவர் கருதியது தீண்டாமை கொடுமையை முற்றிலுமாக ஒழித்தல். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை விடவும் தீண்டாமை கொடுமைக்கு எதிரான அவரது போராட்டம் மிகத்தீவிரமானது.

1919, 1921, 1927, 1934, 1946-ல் மதுரை வந்த காந்தி, முதல் நான்கு வருகைகளின்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லவில்லை. காரணம்-அப்போது தாழ்த்தப்பட்டவர்கள் அக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. எல்லாரும் கோவிலுக்குள் சுதந்திரமாக நுழைகிற நாள் வரும் வரை, அந்தக்கோவிலுக்குள் நுழையமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். 1939 ஜூலை 8-ந்தேதி வைத்தியநாத அய்யர் தலைமையில் ஆலயப்பிரவேசம் நடந்தது.

(இதில் கலந்து கொண்டு கோவிலுக்கு சென்ற ஒருவர் பிறகு காமராஜர் தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சர் ஆனார். அவர்தான் பொது வாழ்க்கையில் தூய்மை, நேர்மையின் அழியாச்சின்னமாக அறியப்படும் அமரர் கக்கன்) இதன்பிறகே, 1946-ல் இறுதியாக மதுரைக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. ‘காந்தியின் அரை ஆடை அகிம்சை போராட்டம் இன்றும் பொருந்தி வருமா..?’

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ செய்தியின்படி, 2020-ம் ஆண்டு முடிவில், உலகின் பல பகுதிகளில் 8.24 கோடி பேர் அகதிகளாக உள்ளனர். ஆட்சியாளர்கள், கிளர்ச்சியாளர்களின் வன்முறைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அடிப்படை ஜனநாயக உரிமைகள், பல நாடுகளில் பல கோடி பேருக்கு வெறும் கனவாக மட்டுமே இருந்து வருகிறது. ஆயுதங்களால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பல நாடுகளில் மக்களுக்கு இன்னமும் அடிப்படை சுதந்திரம் கூட கிட்டியபாடில்லை.

அதேசமயம், இந்தியாவில் நாம் எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். இது ஆயுதங்களால் விளைந்தது அல்ல. அகிம்சையால் பெற்றது. மனித குலத்துக்கு மதுரையின் ‘அரை ஆடை புரட்சி’ சொல்லும் மகத்தான செய்தி இதுதான். ‘மக்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பதை விடவும் மேலானது உண்டா..? அகிம்சை போராட்டம் மட்டுமே இதனை வழங்கும். வாழ்க்கையை வளமாக்கும்’.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »