Press "Enter" to skip to content

பேரூராட்சிகளில் பொது நிதியை பயன்படுத்தும் உச்சவரம்பு உயர்வு- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுடைய தற்சார்புடைய நிறுவனங்களாக முன்னேற்றுவது தான் அரசின் மிக முக்கிய நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை:

பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிருவாகப் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

கோட்டையில் நாங்கள் உட்கார்ந்து கொண்டு, என்னதான் திட்டங்களைத் தீட்டினாலும், அந்த திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால், அதை மக்களுடைய உள்ளத்தில், மக்களுடைய கையில் கொண்டு போய்  சேர்க்க வேண்டுமென்று சொன்னால், அது உங்களால் தான் முடியும். அந்தப் பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்களை நம்பி அரசினுடைய திட்டங்களை நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம். அதற்கான நிகழ்ச்சி தான் இந்தப் பயிற்சி முகாம் என்கிற இந்த நிகழச்சி.  

மக்களாட்சியின் மாண்புகளையும், ஜனநாயகத்தின்  நெறிமுறைகளையும் காப்பதில், இந்த அரசு  எப்போதும்  முதன்மையான மாநிலமாக இருக்கும், முதன்மையான அரசாக இருக்கும்.

மக்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவர்க்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  உங்கள் கைகளில் உள்ளாட்சிகளின் எதிர்காலம்  ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுடைய தற்சார்புடைய நிறுவனங்களாக  முன்னேற்றுவது தான் நமது அரசின் மிக முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. மக்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்துவிதமான அடிப்படை  வசதிகளையும், சேவைகளையும், பல்வேறு வழிகளில் பேரூராட்சிகள் நிர்வாகம்  திறம்பட  செயல்படுத்துகிறது.  

 நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு  அடிப்படை  கட்டமைப்பு  வசதிகளாக இருக்கக்கூடிய, பாதாள  சாக்கடை, மழைநீர் வடிகால் அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட சாலைகள், பேருந்து  நிறுத்தங்கள், தரமான குடிநீர், திடக்கழிவு மேலாண்மை,  குடிசை  பகுதிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற  ஏழைகள்  வாழ்வதற்கு  வீடுகளை கட்டிக் கொடுப்பது, சாலையோர  வியாபாரிகளின்  நலன்  காப்பது, வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம்  அமைத்து  பராமரித்தல், தனிநபர் மற்றும் சமுதாய  கழிப்பிடம் அமைத்தல் போன்றவையுடன்  இன்னும்  பலவிதமான சேவைகளை நகராட்சி நிர்வாகத்துறை மேற்கொண்டு  வருகிறது.

இவற்றை பொதுமக்களுக்கு சரியாக நாம் செய்து கொடுத்தாலே மக்கள் உங்களைக் கொண்டாடுவார்கள். இத்தகைய அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதில் உங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்காக ஒவ்வொரு பேரூராட்சித் தலைவரும், எங்கள் பேரூராட்சிக்கு இத்தனை கோடி தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது பயிற்சி முகாம் தான். ஆனால் இங்கு கோரிக்கை வைக்கக்கூடிய நிலையில் ஒரு அடையாளத்திற்காக பேச அழைத்தவுடன், இங்கே ஒரு சகோதரி வந்து பேசினார்கள். இங்கு பயிற்சி முகாம் கூட்டம் என்பதையே மாற்றி, அந்தப் பயிற்சி பற்றி பேச வந்தவர்கள் ஒவ்வொருவரும் கோரிக்கை வைத்துத்தான் அதிகம் பேசியிருக்கிறார்கள். இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை கேட்கும்போது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஆகவே, பொறுப்பிற்கு வந்தவுடனேயே இதையெல்லாம் செய்ய வேண்டும், இதற்கு இந்த அரசு உதவி செய்ய வேண்டும், நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும்போது உள்ளபடியே உங்களுடைய உரிமையை, நியாயமாக கேட்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, இங்கு பேசிய இளையாங்குடி பேரூராட்சித் தலைவர் சகோதரி பல கோரிக்கைகளை வைத்தார்கள். அதில் முக்கியமான ஒன்றை இந்தக் கூட்டத்தில் நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். 

பேரூராட்சியினுடைய பொது நிதியிலிருந்து  நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள். பணிகளை விரைவாக செயல்படுத்திடும் வகையில், உச்சவரம்பு இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலை பேரூராட்சிகளுக்கு 4 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாகவும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு 8 இலட்சம் ரூபாயிலிருந்து 15 இலட்சம் ரூபாயாகவும், உதவி இயக்குநர் அளவிலே 20 இலட்சம் ரூபாயிலிருந்து 30 இலட்சம் ரூபாயாகவும், மாவட்ட ஆட்சியருக்கு 30 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாகவும், உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

அதேபோன்று நீங்கள் வைக்காத கோரிக்கை மக்கள் பணியில் தம்மை  ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர்கள் உரிய மதிப்பூதியம் வழங்குவது குறித்தும் இந்த அமைப்புகளின் நிதி நிலையை ஆராய்ந்து உரிய ஆணைகளை இந்த அரசு விரைவில் வெளியிட இருக்கிறது என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது திட்டங்களை முறையாக செயல்படுத்துவது உங்களுடைய கடமை. நிதிகள் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாக நீங்கள் கருத வேண்டும். 

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »