Press "Enter" to skip to content

தி.மு.க. அரசின் செயல்பாட்டால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- மு.க.ஸ்டாலின் பேச்சு

பெண்கள் கல்வியை மட்டும் கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் எத்தனை வித தடைகளையும் எதிர்கொள்ள முடியும் என தேனியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேனி:

தேனி ஊஞ்சாம்பட்டியில் இன்று நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 10,427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வைகை அணை, மேகமலை, வெள்ளிமலை போடிமெட்டு, சோத்துப்பாறை, கும்பக்கரை அருவி என இயற்கை எழில் கொஞ்சும் அளவில் உள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தேனி மாவட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 1.1.1997 முதல் செயல்பட்டு வருகிறது. 1989ம் ஆண்டு அரசு தோட்டக்கலைக்கல்லூரி பெரியகுளத்தில் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதே போல் 2001ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1999ம் ஆண்டு உழவர்சந்தை ஆகியவை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை 50 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டது.

விவசாயிகளின் நீண்ட கால கனவான பி.டி.ஆர். கால்வாய், 18ம் கால்வாய் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் பெரியசாமி என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது அவர் தேனி பெரியசாமி என அழைக்கும் அளவுக்கு தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

இதே போல் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வருகிற 7ந் தேதியுடன் தி.மு.க. அரசு பதவியேற்று ஒரு வருடம் முடியப்போகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக உடனடியாக மக்களை சந்திக்க முடியவில்லை. பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறோம். மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன்.

மக்களுக்கான திட்டங்களை அவர்களுக்கு உண்மையில் கொண்டு சேர்ப்பதே திராவிட மாடல் அரசு. வளர்ச்சி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் விருப்பமாகும். இதனை அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரையாக அல்ல, ஆலோசனையாக அல்ல, ஆணையிட்டு கூறி வருகிறேன்.

இன்று 10,427 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்க்கிறேன். பேரறிஞர் அண்ணா சொன்னது போல ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதே இந்த ஆட்சியின் நோக்கமாகும்.

கடந்த ஓராண்டில் எண்ணற்ற பலத் திட்டங்களை செய்து முடித்துள்ளேன். 10 வருடம் ஆட்சியில் இருந்தால் என்னென்ன திட்டங்கள் செய்து முடிக்க முடியுமோ அவை அனைத்தும் ஓராண்டில் செய்துள்ளேன். தேர்தல் அறிக்கையில் கூறிய இன்னும் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அவை விரைவில் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் எனது தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா தலைவிரித்தாடியது. தீவிர நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாக தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 91 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. கல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக ரூ.317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெசவாளர் நலன் கருதி பஞ்சுக்கு 1 சதவீத வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் புதிய கடன்களும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அவர்களுக்கு உதவும் வகையில் இன்னுயிர் காக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 4.9 லட்சம் ஏக்கர் குறுவை பாசனம் பெறும் வகையில் கடைமடை விவசாயிகளும் பயனடைய தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு ரூ.64 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவிகளும் பட்டம் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பெண்கள் கல்வியை மட்டும் கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் எத்தனை வித தடைகளையும் எதிர்கொள்ள முடியும். இதுவரை என்னென்ன திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தேன். தேனி மாவட்டத்தில் இனி எந்தெந்த திட்டங்கள் செய்யப்படும் என்பதை கூற கடமைப்பட்டுள்ளேன்.

பாளையம் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை ரூ.12 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். போடி கொட்டக்குடி ஆற்றில் ரூ.3 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும். தேனி மாவட்டம் நெல் உற்பத்தியில் அதிக அளவு ஈடுபட்டு இருப்பதால் நெல் உற்பத்தி அரிசி ஆலை அமைக்கப்படும். ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் நரிக்குறவர் குடியிருப்பு கட்டப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். குமுளி பேருந்து நிலையம் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »