Press "Enter" to skip to content

லைவ் அப்டேட்ஸ்: நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்திற்கு, ரஷியா மிரட்டல்

15.05.2022

03.50:  நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை பின்லாந்து பின்பற்றினால்,  ரஷியாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று, அந்நாட்டின் அதிபர் புதின் எச்சரித்துள்ளார். பின்லாந்து தனது பாரம்பரியமான ராணுவ நடுநிலை என்ற கொள்கையை கைவிட்டு விட்டதாகவும், இது அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார்.

01.30: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். தலைநகர் கீவ்வில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப் பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷியாவை பயங்கரவாத நாடாக, அமெரிக்கா, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் உக்ரைன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

12.50: உக்ரைனில் நடந்த போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மனி வெளியுறவு மந்திரி  அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்திற்கு எதிரான இந்தப் போருக்கு மட்டுமல்ல, அதனால் ஏற்பட்டுள்ள அனைத்து விளைவுகளுக்கும் ரஷியா மட்டுமே பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

14.05.2022

23.30: கடல் கண்ணி வெடிகள் கிடப்பதால், பொதுமக்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று உக்ரைனின் ஒடோசா நகர சபை நிர்வாகம் எச்சரித்துள்ளது. கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணி நிபுணர்களால் கையாளப்படும் என்றும், எனினும் நீச்சல் உள்பட கடலுக்கு செல்வதில் ஆபத்து நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருங்கடல் பகுதியில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தலும் நீடிக்கிறது என்றும் ஒடோசா நகர கவுன்சில் கூறியது.

21:00: உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுகிறது. உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரிசெய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது. 

சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உள்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டன.

17:00: விமானத் தாக்குதலை முறியடிப்பது எப்படி? என்பது தொடர்பாக பால்டிக் கடல் பகுதியில் ரஷியாவின் Su-27 போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. நேட்டோவில் இணைவது தொடர்பான திட்டங்களை பின்லாந்து அறிவித்த நிலையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. 

16:00: ரஷியாவை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கவும் போரினால் உருவாகும் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை சரிசெய்யவும் பணியாற்ற வெளியுறவுத் துறை மந்திரிகள் குழு உறுதியளித்தது.

15:45: ரஷிய போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக,  மிக முக்கியமான தென்கிழக்கு துறைமுகமான மரியுபோலில் உள்ள உருக்காலையில் காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உக்ரைன் அதிகர் ஜெலன்ஸ்கி கூறினார்.

15:30: நேட்டோ நாடுகள் ரஷிய எல்லைகளில் அணு ஆயுத படைகளை கொண்டு வந்து நிறுத்தினால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி அலெக்சாண்டர் குருஷ்கோ எச்சரித்துள்ளார். 

15:00: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் சில வாரங்களாக குண்டுகளை வீசி தாக்கிய ரஷியப் படைகள் தற்போது அந்த நகரில் இருந்து திரும்பப்பெற பெறுவதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷிய படைகள் கிழக்கு பகுதியில் கடுமையான போரில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷிய படைகள் கார்கீவில் இருந்து வெளியேறுகின்றன.

10.09: ரஷிய ராணுவம் தனது நாட்டின் கிழக்கு பகுதி வழியாக உக்ரைனுக்குள் நுழைய, பிலோஹோரிவிகாவில் உள்ள சிவர்ஸ்கை டோனட் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் உக்ரைன் ராணுவம் வான்வெளி தாக்குதல் மூலம் இந்த பாலத்தை உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் நதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டது. இது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என உக்ரைன் கூறியுள்ளது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »