Press "Enter" to skip to content

அப்போது ஆலோசிக்காத மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசுக்கு முன்பே தமிழக அரசு கல்லெண்ணெய் மீதான வரியை குறைத்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

கல்லெண்ணெய், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் நாடு முழுவதும் கல்லெண்ணெய், டீசல் விலை குறைந்துள்ளது.

மாநிலங்களில் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கல்லெண்ணெய் பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.  

இந்நிலையில் வாட் வரியை குறைக்க கோரும் மத்திய நிதி மந்திரியின் கருத்திற்கு, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசு வரியை குறைப்பதற்கு முன்பே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு கல்லெண்ணெய் மீதான வாட் வரியை குறைத்தது.  இதன் மூலம் கல்லெண்ணெய் விலை தமிழகத்தில் 3 ரூபாய் வரை குறைந்தது.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்ததன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

தற்போது குறைக்கப்பட்டுள்ள வரி மூலம் மேலும் 800 கோடி ரூபாய் ஆண்டுக்கு வருமான இழப்பு ஏற்படும். இது தமிழகத்திற்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

வரியை முழுமையாக உயர்த்திவிட்டு தற்போது ஓரளவு மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது.  அதற்கு பிறகு கூட பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி கூடுதலாக உள்ளது.

இதற்கு முன்னர் பலமுறை பெட்ரோலிய பொருட்கள் மீது மத்திய அரசு வரியை உயர்த்திய போது மாநிலங்களை கலந்து ஆலோசிக்கவில்லை.

தற்போது மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இவ்வாறு தமது அறிக்கையில்  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar