Press "Enter" to skip to content

சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் அடுத்த வாரம் ராஜீவ் கொலை கைதிகள் 6 பேரும் தனித்தனியாக மனு

பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி மற்ற 6 பேரும் விடுதலை பெற தனித்தனியாக உயர்நீதிநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் புழல் ஜெயிலிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 18-ந்தேதி சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு மூலம் விடுதலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன் விடுதலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில் சிறைகளில் உள்ள மேலும் 6 ராஜீவ் கொலை குற்றச்சாட்டு கைதிகள் விடுதலைக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் ஊட்டியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் 5-வது மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டு காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ள நளினியை வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 பேர் விடுதலை சம்பந்தமாக தீர்மானத்தை ஆளுநர் , ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

இதில் தற்போது பேரறிவாளன் மட்டும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனைவரும் ஒரே வழக்கின் கீழ் உள்ளவர்கள் தான் இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்து இருக்க வேண்டும்.

இதே வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மேலும் 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.

6 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் சிறிது காலதாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதிக்குள் 6 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த நிலையில் முருகனுக்கு 6 நாட்கள் அவசர கால பரோல் விடுப்பு வழங்கக்கோரி அவரது மனைவி நளினி சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசு அவருக்கு விடுப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முருகனுக்கு பரோல் கோரி சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் ஜூன் 1-ந்தேதி மனுதாக்கல் செய்ய உள்ளோம்.

இதனிடையே, விடுதலை கோரி ஏற்கனவே நளினி சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி மற்ற 6 பேரும் விடுதலை பெற தனித்தனியாக உயர்நீதிநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு வக்கீல் புகழேந்தி கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »