Press "Enter" to skip to content

காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி- நக்மா விரைவில் கட்சி மாறுகிறார்

கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதால் நக்மா விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசியலில் ஜனநாயக கட்சி என்றால் அது காங்கிரசாக தான் இருக்க முடியும். ஏனென்றால் மற்ற கட்சிகளில் மேலிடத்தை பற்றி விமர்சனம் செய்தால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை பாய்ந்து விடும்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் கோஷ்டிகளும் அதிகம் உண்டு. அதே சமயம் கருத்துகள் சொல்வதற்கும் சுதந்திரம் உண்டு. கட்சியை பற்றியோ மற்ற தலைவர்கள் பற்றியோ யார் எந்த கருத்தை சொன்னாலும் அவர்கள் மீது கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும் அதனால் என்ன நடக்க போகிறது என அப்படியே விட்டு விடுவார்கள்.

நடிகை நக்மா கடந்த வாரம் தனக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்காததால் ஆத்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக டுவிட்டரில் பகிரங்கமாக கருத்துகளை பொரிந்து தள்ளினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ வழக்கம் போல அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறது.

ஒருகாலத்தில் தமிழ் திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நக்மா கடந்த 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

தொடர்ந்து 18 ஆண்டுகள் அவர் கட்சிக்காக உழைத்தார், உழைத்து உழைத்து தேய்ந்து போனதுதான் மிச்சம். அவரால் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ, மந்திரியாகவோ ஆக முடியவில்லை. அவருக்கு வெறும் மும்பை காங்கிரஸ் துணைத்தலைவர் பதவி உள்பட சில பதவிகள் மட்டுமே கிடைத்தது.

ஆனால் அவருடன் சம காலத்தில் நடித்த நடிகை ரோஜா ஆந்திராவில் 2 தடவை எம்.எல்.ஏ.வாகி தற்போது மந்திரியாகவும் ஆகி விட்டார்.

இந்த வருத்தம் நக்மாவுக்கு இல்லாமலா போகும்?

இத்தனை வருஷம் கட்சிக்காக உழைத்து என்ன பிரயோசனம் என்ற மனநிலைக்கு அவர் தள்ளப்பட்டு உள்ளார். சோனியா காந்தி தனக்கு எம்.பி. பதவி தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதன் எதிரொலியாக தான் அவர் வெளிப்படுத்திய டுவிட்டர் பதிவும் அமைந்தது. இது தொடர்பாக நக்மா வேதனையுடன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது 9 மொழி படங்களில் நான் வேலையாக நடித்துகொண்டு இருந்தேன். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது எனக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த பதவியை ஏற்றுக்கொண்டால் திரைப்படத்தில் நடிப்பது பாதிக்கப்படும். அதனால் அதை வேண்டாம் என சொல்லிவிட்டேன். சரி எப்படியும் நம் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

கொஞ்சநாளில் திரைப்படத்தில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறினேன். கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தேன்.

மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பெண்களுக்காக போராட்டம் எல்லாம் நடத்தி இருக்கிறேன்.

பெண்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வந்து இருக்கிறேன். களத்தில் இறங்கி கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு இருக்கிறேன். இதற்கு மேல் எனக்கு என்ன தகுதி வேண்டும். அதனால் தான் நான் எனது மனக்குமுறலை தெரிவித்தேன். இது பற்றி கட்சி மேலிடத்திலும் எனது விளக்கத்தை தெரிவித்து விட்டேன்.

எனது உழைப்பை பார்த்தும், எனக்கு பொது மக்களிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்பு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தான் அதிகமான அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. மற்ற கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை.

நக்மா இப்படி கூறினாலும் அவர் மனதில் வேறு ஏதாவது ஒரு கட்சிக்கு தாவலாமா என்ற எண்ணமும் ஓடி கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் பாரதிய ஜனதா பக்கமே அவர் சாய்வார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன்பு நக்மாவை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டது. மந்திரி பதவிகூட கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியது.

ஆனாலும் காங்கிரஸ் மீதான பற்றுதல் காரணமாக அவர் பாரதிய ஜனதாவில் இருந்து வந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லி விட்டு காங்கிரஸ் பக்கம் சென்றார். ஆனால் தன் அதிருப்தியை வெளியிட்ட பிறகும் அவரை சமாதானப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை. இந்த ஆதங்கமும் நக்மாவிடம் உள்ளது.

கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதால் நக்மா விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு சென்றால் எப்படியும் தன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை நக்மா மனதில் ஆழமாக இருக்கிறது.

அதற்கு ஏற்ப பாரதிய ஜனதா மேலிடமும் சாதுர்யமாக காயை நகர்த்தி வருகிறது. அவரை தங்கள் வலையில் வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் தூது மேல் தூது விட்டு வருகிறது.

இதனால் நடிகை நக்மா விரைவில் தனது கட்சி துண்டை மாற்றி தோளில் போட்டு கொள்வார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »