Press "Enter" to skip to content

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ஜாக்கி ஷெராஃப் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினி காந்துடன் கைகோத்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக தமன்னாவும், முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணனும் நடிக்கின்றனர். மேலும் படத்தை பான் இந்தியா முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் (சிறப்பு தோற்றம்), ‘புஷ்பா’ பட புகழ் சுனில் ஆகியோர் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இதில் பாலிவுட் நடிகருக்கான இடம் மட்டும் காலியாக இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் ‘ஜெயிலர்’ அடைந்துள்ளது.

Source: Hindu