ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் இந்தியில் ரூ.432 கோடியை வசூலித்திருந்த ‘கேஜிஎஃப் 2’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அடுத்ததாக ‘பாகுபலி 2’ வசூல் சாதனையை விரைவில் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் திரையரங்கத்தில் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
தற்போது படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் படம் ரூ.877 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் படம் ரூ.450 கோடி அளவில் வசூலித்துள்ளது. இதன் மூலம் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் இந்தி வசூலை முறியடித்துள்ள ‘பதான்’, ‘பாகுபலி 2’ படத்தின் இந்தி வசூலான ரூ.510 கோடியை முறியடிக்கும் என தகவல் கணிக்கப்பட்டுள்ளது.
Source: Hindu