Press "Enter" to skip to content

வசந்த முல்லை – விமர்சனம்: தூக்கத்தை வலியுறுத்தும் நோக்கமும் தாக்கமும்!

‘தூக்கம் ரொம்ப முக்கியம் பாஸ்’ என்ற செய்தியை த்ரில்லரின் வழியே மக்களிடம் கொண்டுசேர்க்கும் படைப்புதான் ‘வசந்த முல்லை’.

ஐடியில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் ருத்ரனுக்கு (பாபி சிம்ஹா) நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. அவரது ஆசைக்கு தீனி போடும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் ஒன்று அவரிடம் கொடுக்கப்படுகிறது. திருத்தம். அவரே கேட்டு வாங்கிக்கொள்கிறார். பணத்திற்காக நாள் கணக்கில் தூங்காமல் தொடர் வேலையில் இருக்கும் ருத்ரன் ப்ளாக்அவுட் (blackout) நோயால் பாதிக்கப்படுகிறார்.

இறுதியில் மருத்துவர் அறிவுரைப்படி பணியிலிருந்து பிரேக் எடுத்து, தன் காதலி நிலாவோடு (காஷ்மீரா பர்தேஸி) ட்ரிப் செல்கிறார். அங்கு அவர் தங்கும் ‘வசந்த முல்லை’ ஹோட்டலில் எதிர்பாராத அசம்பாவித சம்பங்கள் நடக்கிறது. அது என்ன? ஏன்? இதையெல்லாம் செய்வது யார்? இதுதான் படத்தின் திரைக்கதை.

வித்தியாசமான திரைக்கதையில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் டைம்லூப் உள்ளிட்ட சில திருப்பங்களுடன் கதையை நகர்த்தி செல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ரமணன் புருசோத்தமா. அதன்படி இன்டர்வல் ப்ளாக் திருப்பமும், சம்பவங்களுக்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்ற ஆர்வமும் மேலோங்காமலில்லை.

படத்தின் தொடக்கம் 2 பாடல்கள், ஒரு சண்டைக்காட்சி என பாபி சிம்ஹா தூக்கத்தில் ஓட்டும் காரைப்போல திசையறியாமல் அதன் போக்கில் போகிறது. பார்வையாளர்களும் ஒரு போக்கில் அமர்ந்து பொறுமையுடன் கதையை தேட வேண்டியிருக்கிறது. உண்மையில், இடைவேளையை நெருங்கும்போதுதான் படம் தொடங்கி அதற்கான கிராஃப் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுகிறது. லூப் காட்சிகளால் தொடங்கும் இரண்டாம் பாதி ‘எப்புர்றா’ என சொல்ல வைத்தாலும், ஒரு படத்தை இரண்டு முறை பார்த்த உணர்வும் எழாமலில்லை.

தொடக்கத்தில் லூப் காட்சிகள் சுவாரஸ்யம் கொடுத்தாலும் நீள நீள… அயற்சியே மிஞ்சுகிறது. குறிப்பாக, படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை பார்வையாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் ‘இதுக்கா டைம் லூப்’ போன்றவை உடையும் போது ஏமாற்றம்.

ராஜேஷ் முருகேசன் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்துகின்றன. சொற்ப கதாபாத்திரங்களைச்சுற்றி நடக்கும் கதையில் பாபி சிம்ஹா ஒற்றையாளாக மொத்தப் படத்தையும் இழுத்துச் செல்கிறார். கண்களுக்கு கீழான கருவளையம், தூங்கமின்மையால் உண்டான அழுத்தம், காதலியைக்காக்க நடத்தும் போராட்டம் என படத்தின் ஆன்மாவுக்கு உயிர் கொடுக்கிறது பாபி சிம்ஹாவின் நடிப்பு. காஷ்மீரா பர்தேசி அழுகுடன் அழுகையும் கூடவே தொற்றியிருக்கிறது. பெரும்பாலான காட்சிகளில், ‘ருத்ரா… ருத்ரா’ என அழுதுகொண்டும், சில பல காதல் லீலை, பாடல்காட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஆக்ரோஷமாக கத்தும் காட்சிகளில் அவரின் பால்வடியும் முகம் அதற்கு ஈடுகொடுக்காமல் முரண்டுபிடிப்பது திரையில் பளிச்சிடுகிறது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த கேப்பில் அதே கெட்டப்புடன் வந்து நடித்துகொடுத்திருக்கிறார் ‘டார்லிங்’ ஆர்யா. (இப்படித்தான் படத்தில் அவர் பெயர் தலைப்பு கார்டில் போடப்படுகிறது). பெரிய வேலையில்லை என்றாலும் கொடுத்த சிறப்புத் தோற்றத்தில் நட்புக்காக வந்து செல்கிறார். சரத் பாபு, கொச்சு பிரேமன், ரமா பிரபா கதாபாத்திரங்கள் அரைநாள் கால்ஷூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பணத்தை நோக்கி முந்தியடித்து ஓடிக்கொண்டிருக்கும் நவயுகத்தில் உடல்தான் பிரதானம் என்பதை வலியுறுத்தும் படம் அதனை வெறும் வசனத்தில் கடத்துவது பலவீனம். ‘தூங்கி எழ அலாரம் வைக்குறோம்… நம்மல்ல யாராச்சும் சரியான நேரத்துல தூங்குறதுக்கு அலாரம் வைக்கிறோமா?’ என்ற வசனம் கூட்டும் அழுத்தத்தை, திரைக்கதையும் சேர்த்து கூட்டியிருந்தால் படம் அதற்கான நோக்கத்துடன் முழுமையை கொடுத்திருக்கும். தூக்கத்தை வலியுறுத்தும் படம் தொடங்கிய முதல் அரைமணி நேரம் மட்டும் பார்வையாளர்களிடம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது..!

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »