ஆர்எஸ்எஸ் குறித்து தனது தந்தை எழுதியிருக்கும் ஸ்கிரிப்டை வாசித்தபோது அழுதுவிட்டதாகவும், அந்தக் கதையை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் பெருமைப்படுவேன் என்றும் இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் புகழ்ப்பெற்ற திரைக்கதை எழுத்தாளர். சொல்லப்போனால், ராஜமவுலியின் படங்களுக்கு பக்கபலமாக இருப்பதே விஜயேந்திர பிரசாத்தின் எழுத்துதான். தற்போது அவர் ‘ஆர்எஸ்எஸ்’ அமைப்பு குறித்த கதையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து எனக்குத் தெரியாது. நான் அந்த அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அது எப்படி உருவானது? அந்த அமைப்பின் நம்பிக்கைகள் என்ன? எப்படி வளர்ச்சியடைந்தது என்பது குறித்தெல்லாம் எனக்குத் தெரியாது.
ஆனால், ஆர்எஸ்எஸ் குறித்த என் தந்தையின் ஸ்கிரிப்டை வாசித்தபோது, எமோஷனலாகிவிட்டேன். அந்த ஸ்கிரிப்டை படிக்கும்போது பலமுறை அழுதுவிட்டேன். அந்த கதை என்னை அழவைத்துவிட்டது. அந்த ஸ்கிரிப்ட் மிகவும் சிறப்பாகவும், எமோஷனலாகவும் உள்ளது. ஆனால் அது குறிப்பால் சமூகத்திற்கு என்ன உணர்த்த விரும்புகிறது என தெரியவில்லை.
என் தந்தை எழுதிய திரைக்கதையை நான் இயக்குவேனா என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முதலாவதாக, இது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை.ஏனென்றால், எனது தந்தை இந்த ஸ்கிரிப்டை வேறு ஏதாவது அமைப்புக்காகவோ, நபர்களுக்காகவோ அல்லது தயாரிப்பாளருக்காகவோ எழுதியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அந்தக் கதையை இயக்குவதில் நான் பெருமைப்படுவேன். காரணம், அது ஓர் அழகான, உணர்ச்சிகரமான டிராமா. ஆனால் ஸ்கிரிப்ட்டின் தாக்கங்கள் பற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Source: Hindu