ஜி.வி. பிரகாஷ் குமார், கவுரி கிஷன், வெங்கட் பிரபு உட்பட பலர் நடித்து ஆக.25ம் தேதி வெளியான படம், ‘அடியே’. மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, “தற்போதுள்ள சூழலில் முதலீடு செய்து படத்தைத் தயாரித்து, திரையரங்குகளில் வெளியிட்டு, வெற்றி பெற்று லாபம் காண்பது அரிதானது. அந்த வகையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
என் நடிப்பில் வெளிவந்த ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘அடியே’ திரைப்படமும் தயாரிப்பாளருக்கு லாபத்தைப் பெற்று தந்திருக்கிறது. ஒரு படத்தில் நடிக்கிறோம். தயாரிப்பாளர் முதலீடு செய்கிறார். அதில் அவர் லாபம் சம்பாதித்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இந்தப்படம் வசூலில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் எனது நடிப்பைப் பாராட்டினார்கள். அதற்கு இயக்குநர்தான் காரணம்” என்றார்.
Source: Hindu