சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம், ‘தடை உடை’. முத்ரா பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். ரோகிணி, செந்தில், பிரபு, செல் முருகன், தீபக், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் முழு நீளக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஸ்ரீ இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் ராகேஷ் என்.எஸ் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த கதாநாயகன் ஒரு கிராமத்துக்கு நல்லது செய்ய நினைக்கிறார். வரும் தடைகளை எதிர்த்து கஷ்டப்படும் அவர், அந்த இலக்கை அடைந்தாரா என்பது படம். சிம்ஹா இதுவரை நடித்த பாத்திரங்களில் இருந்து இந்தப் படம் வேறுவிதமாக இருக்கும். அவரை ‘ஃபேமிலி ஆடியன்ஸி’டம் கொண்டு சேர்க்கும் படமாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் சிவகங்கையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆயிரம் பேர் பங்குபெற்ற திருவிழா பாடல், படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். ‘வராத திருவிழா வந்திருக்கு’ என்ற அந்தப் பாடலில் ஏராளமான கிராமத்தினரும் பங்குபெற்றனர்.
இதை போல படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் பேசப்படுவதாக இருக்கும். ‘சிறுத்தை’ கணேஷ்குமார், இந்தச் சண்டைக்காட்சியை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு ராகேஷ் என்.எஸ் கூறினார்.
Source: Hindu