சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்துக்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார். இவர் இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமான இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ஆயத்தம்ன் கிங்ஸ்லீ, நமோ நாராயணன் போன்ற நட்சத்திரங்களுடன், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ள எல்லி ஆவரம், ஜேஸன் ஷா, பினேடிக்ட் காரெட் போன்ற வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.
சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.’கான்ஜூரிங் கண்ணப்பன்’ பற்றி பேசிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், “ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், ஃபான்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்” என்று கூறினார்.
Source: Hindu