Press "Enter" to skip to content

சந்திரபாபு கைதுக்கு எதிர்ப்பு | ஆந்திர சட்டசபையில் விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா

அமராவதி: ஆந்திர சட்டசபையில் தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ-வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா விசில் அடித்து அமளியில் ஈடுபட்டார்.

ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அம்மாநில சட்டப்பேரவையிலும் இது எதிரொலித்தது. நேற்று (செப்.21) சட்டப்பேரவைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா, ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபுவை நோக்கி தனது படங்களில் வருவது போல தொடைகளை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால்விடும் வகையில் சைகை செய்தார்.

பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கண்டித்த சபாநாயகர் தம்மினெனி சீதாராம், “இதை பாலகிருஷ்ணாவின் முதல் தவறாக கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவையின் விதிமுறைகளை மீறி உறுப்பினர் யாரேனும் அநாகரிகமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று (செப்.22) சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த முறை கையோடு விசில் ஒன்றைக் கொண்டு வந்த பாலகிருஷ்ணா, அந்த விசிலை ஊதி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Source: Hindu