Press "Enter" to skip to content

திரை விமர்சனம்: கட்டில்

அரண்மனை போன்ற வீட்டில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த கணேசன் (இ.வி.கணேஷ்பாபு), அம்மா (கீதா கைலாசம்), கர்ப்பிணி மனைவி தனலட்சுமி (சிருஷ்டி டாங்கே), 8 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். கணேசனுடன் பிறந்த 2 அண்ணன்கள், ஓர் அக்கா வெளிநாட்டில் வசிப்பதால், பாரம்பரிய வீட்டையும் அதில் உள்ள பொருட்களையும் விற்று வரும் பணத்தைப் பாகம் பிரித்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது, முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரியக் கட்டிலை விற்க மறுத்து, தன்னோடு வைத்துக் கொள்ளப் போராடுகிறார் கணேசன். அதற்காக அவர் இழந்ததும் பெற்றதும்தான் கதை.

வாழ்ந்து சிறந்த ஒரு குடும்பத்தின் கடைசி வாரிசுக்குப் பாரம்பரியத்தின் மீது இருக்கும் பிடிமானமும் அதற்காக அவர் கொடுக்கும் விலையும்தான் கதைக் களம். தன் தந்தைக்கும் தனக்கும் பாரம்பரியக் கட்டிலின் மீது இருக்கும் பிணைப்பை, ‘ஃப்ளாஷ் பேக்’ ஆக நினைத்துப் பார்த்து, தற்போதைய வாரிசாக இருக்கும் விதார்த், குடும்பத்தின் கதையை சொல்லுவதுபோல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் எடிட்டர், இயக்குநர் பி.லெனின். அவர் எழுதியிருக்கும் வசனங்களும், படத்தொகுப்பும் படத்தை முதுகெலும்பாகத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.

வீட்டை வாங்கியவர், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற கிளப்பாக மாற்ற, வேலையைத் தொடங்க, அங்கே 15 நாள் அவகாசத்தில், கடல் போன்ற வீட்டின் ஓர் அறையில் ஒடுங்கி வாழும் கணேசன் மற்றும் அவனது குடும்பத்தாரின் நாட்கள், சப்பாத்திக் கள்ளியாக மனதைத் தைக்கின்றன. நள்ளிரவில் வீட்டைக் காலி செய்து, ஏற்கெனவே சொந்த மண்ணைத் துறந்து வாழும் ஈழ அகதியின் வீட்டில் அக்குடும்பம் இரவைக் கழிக்கும்போதும் கண்கள் நம் கட்டுப்பாட்டை இழக்கின்றன.

கட்டில் நுழைவதற்கு ஏற்ற வாடகை வீட்டைத் தேடி, பார்க்கும் வீடுகளின் வாசலை அளப்பது, கட்டிலைப் பழமைப் பொருட்கள் கடையில் வைத்துப்பாதுகாக்கும்போது, பள்ளி முடிந்து அந்தக் கடைக்கு ஓடி அதில் ஏறிப் படுத்ததும் கணேசனின் மகன்அயர்ந்து தூங்கிவிடுவது எனக் கட்டிலைச் சுற்றிப் பின்னப் பட்டிருக்கும் காட்சிகள் உணர்வு குன்றாமல் இருக்கின்றன.

கட்டிலுக்காகக் கணேசன் படும் பாடுகளுக்கு வெளியே, அவர் பணிபுரியும் ஆலையில் நடக்கும் போராட்டம், ஏழைப் பெண் செல்வியின் வாழ்க்கை, பழம்பொருள் விற்பனை கடை நடத்தும் ராமைய்யாவுக்கான குடும்ப சவால் போன்ற கிளைக் கதைகள், மையக் கதைக்குப் பலமாக இருந்தாலும் அதில் இருக்கும் ‘நாடக’த்தையும் கட்டிலைத் தக்க வைப்பதற்கான போராட்டத்திலும் இன்னும் வலிமை கூட்டியிருக்கலாம்.

3 தலைமுறைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் கணேஷ்பாபு, கதையின் நாயகனாகத் தனது பாரிய உழைப்பைத் தந்திருக்கிறார். கணேசனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், மனைவி தனலட்சுமியாக வரும் சிருஷ்டி டாங்கே, ராமைய்யாவாக வரும் இந்திரா சவுந்தர்ராஜன், செல்வியாக வரும் செம்மலர் அன்னம், மக்கள் விரும்பத்தக்கதுடர் நிதிஷ் மிகையின்றி நடித்திருக்கிறார்கள்.

அரண்மனை வீட்டின் வாழ்வையும் அதன் பின்னரான கணேசனின் ஓட்டத்தையும் உயிரோட்டத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர். காந்த் தேவாவின் பின்னணி இசை படத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறது. ‘தெய்வங்கள் எல்லாம்’ பாடல் கலங்க வைக்கிறது.

தலைமுறைகள் கடந்து நம்மோடு தங்கிவிடும் உயிரற்றப் பொருட்களை உணர்வாகப் பார்க்கும் யாரையும் இப்படம் ஆரத்தழுவும்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »