Press "Enter" to skip to content

இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

சென்னை: இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குக்காக அவரது உடல் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47), கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிப்பட்டு, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதையொட்டி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த பவதாரிணி, மைடியர் குட்டிச்சாத்தன்(1984) என்ற மலையாள படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானவர். தமிழில் பிரபுதேவா நடித்த ராசய்யா(1995) படத்தில் ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடலுடன் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பாடிமக்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழில் 2000-ம் ஆண்டு வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விரு தையும் பெற்றார்.

உடல்நலக்குறைவால் இறந்தபாடகி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

திரையுலகினர் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை 5 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, நடிகர்கள் பிரேம்ஜி அமரன், சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோர் மனமுடைந்த நிலையில் உடல் அருகே இருந்தனர். திரையுலகினர் ஒவ்வொருவராக சென்று பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தனர். இதற்கிடையே ரசிகர்களும் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.

திரையுலகில் நடிகர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகர், இயக்குநர்கள் சுதா கொங்கரா, வெற்றிமாறன், மணிரத்னம், வெங்கட்பிரபு, பாக்கியராஜ், தங்கர்பச்சான், சீனு ராமசாமி, கோதண்ட ராமையா, ஜெயம் ராஜா, லிங்குசாமி, பேரரசு, நடிகர்கள் சிவக்குமார், ராமராஜன், செந்தில், மனோஜ் பாரதிராஜா, கார்த்தி, விஷால், சிலம்பரசன், சதீஷ், சூரி, சிவா, ஆனந்தராஜ், காந்த், ஜான் விஜய், நடிகைகள் ராதிகா சரத்குமார், காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, வனிதா விஜயகுமார், பாடகர்கள் மனோ,கிரிஷ், இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், காந்த் தேவா, தயாரிப்பாளர்கள் டி.ஜி.தியாகராஜன், ஆர்.பி.சவுத்ரி, கல்பாத்தி குழுவினர் சார்பில் அர்ச்சனா, சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம்உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இரவு 10 மணி வரை திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பவதாரிணியின் உடல் தி.நகரில் வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்துக்கு இறுதி சடங்குக்காக பவதாரிணியில் உடல் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக தேனியில் இறுதி சடங்குகளை மேற்கொள் வதற்காக சென்றதால் அஞ்சலியில் இளையராஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்கள் இரங்கல்: அரசியல் தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: தனித்தன்மையுடன் கூடிய குரலால்தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் பவதாரணி. அவரது மறைவு தமிழ் இசை உலகுக்கு பேரிழப்பாகும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை இளம்வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: காலத்தால் அழியாத பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தவர் பவதாரணி. அவரது திடீர் இழப்பு, இசைதுறையில் ஈடுசெய்ய முடியாத ஒன்று.

விசிக தலைவர் திருமாவளவன்: அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் வாய்ந்த பாடகர். அவரது மறைவு கலையுலகுக்கு பேரிழப்பு. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திமுக எம்.பி. கனிமொழி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமக தலைவர் சரத்குமார், காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், வி.கே.சசிகலா, உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »