Press "Enter" to skip to content

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. சமீபத்தில் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

திரையரங்கில் வெளியான போது இப்படத்தில் இடம்பெற்ற நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்க கருத்துகள் விமர்சகர்களால் கடுமையாக சாடப்பட்டது. தனது படத்துக்கு கெட்ட விமரசனங்களை வழங்கிய விமர்சகர்களை ‘ஜோக்கர்கள்’ என்று நேரடியாகவே தாக்கினார் சந்தீப் ரெட்டி வங்கா.

இதனையடுத்து இப்படம் ஓடிடியில் வெளியானபிறகு, படத்தை பார்த்த பிரபலங்கள் முதல் இணையப் பயனாளர்கள் வரை பலரும் இப்படத்தை வறுத்தெடுத்தனர். குறிப்பாக நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய எக்ஸ் பதிவில், ”ஒரு படத்தை பார்த்து யாரேனும் எரிச்சல் அடைந்திருக்கிறீகளா? ஒரு குறிப்பிட்ட படத்தை பார்த்து நான் வாந்தி எடுக்க விரும்பினேன். மிக மிக கோபமடைந்தேன்” என்று பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார். ‘அனிமல்’ ஓடிடியில் வெளியாகி மறுநாள் ராதிகா இவ்வாறு பதிவிட்டது, சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. பலரும் ராதிகா ‘அனிமல்’ படத்தைத்தான் சொல்கிறார் என்று தங்கள் பங்குக்கு அந்த படத்தை சாடத் தொடங்கினர்.

— Radikaa Sarathkumar (@realradikaa) January 27, 2024

ராதிகாவைத் தொடர்ந்து பார்த்திபனும் தன்னுடைய பதிவில், “திருமதி ராதிகா சரத்குமார் எரிச்சலைடைந்ததாகக் குறிப்பிட்ட ஒரு படம் போல நானொன்று கண்டேன். கண்டதும் ஜூரம் கொண்டேன்.டாக்டரைக் கண்டேன். அவரும் ——— செய்து அடித்து போட்டதைப் போல ஜுரத்தில் இருப்பதாக அவரின் டாட்டர் சொன்னார்.காரணம் கேட்டேன். நான் பார்த்த படத்தை எனக்கு முன் காட்சியில் அவரும் பார்த்தாராம். கண்டுப்பிடித்தாலும் கண்டுக்காமல் இருக்கவும்.(அது box office hit)” என்று கூறியிருந்தார்.

இணையத்தில் இந்த கொந்தளிப்புக்கு காரணம் இப்படத்தில் இடம்பெற்ற சில கொச்சையான வசனங்கள் தான். உதாரணமாக படத்தின் தொடக்கத்தில், நாயகியை பார்த்து நாயகன் ‘உன்னுடைய இடுப்பெலும்பு பெரிதாக இருக்கிறது! உன்னால் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுத் தரமுடியும்” என்று சொல்கிறார். அடுத்த காட்சியில் தன்னுடைய நிச்சயதார்த்தை முறித்துவிட்டு நாயகி நாயகனுடைய வீட்டுக்கே வந்துவிடுகிறார். இப்படி ஒரு ப்ரொபொசல் காட்சியை எந்த படத்திலாவது பார்த்ததுண்டா? அதே போல திருமணத்துக்குப் பிறகு நாயகியிடம் சண்டை போடும் நாயகன் ஒரு கட்டத்தில், “நீ மாதத்தில் நான்கு முறை நாப்கின் மாற்றுபவள்” என்று கூறுகிறார். இதுபோன்ற அபத்தமான, மோசமான வசனங்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. என்னதான அடல்ட்ஸ் ஒன்லி படம் என்றாலும் இப்படியான வசனங்கள் ஒரு மெயின்ஸ்ட்ரீம் ஊடகம்வில் இடம்பெறுவது ஆபத்தானது.

ஓடிடி வெளியீட்டுக்குப் பின் இன்ஸ்டாகிராம் போன்ற 2கே கிட்ஸ் அதிகம் புழங்கும் சமூக வலைதளங்களில் நாயகனின் பராக்கிரமங்களை பறைசாற்றும் வகையில் எடிட் செய்யப்பட்ட ரீல்ஸ் காணொளிக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் இப்படத்தை பார்க்கும் இளைஞர்களின் மனநிலையில் அது என்னவிதமான தாக்கத்தை உண்டாக்கும்?

சரி, படத்தின் பெயர் ‘அனிமல்’. எனவே அதுதான் நாயகனின் கதாபாத்திரத்தின் தன்மை என்று வைத்துக் கொண்டாலும், க்ளைமாக்ஸ் உட்பட படத்தில் எந்த இடத்திலும் நாயகன் தனது தவறை உணர்வதாக காட்டவே இல்லை. ஒரு காட்சியில் தன்னுடன் விவாதம் புரியும் நாயகியிடம் ‘அறைந்துவிடுவேன்’ என்று நாயகன் சொல்கிறார். பதிலுக்கு ‘என்னை அறைந்துவிடுவாயா? அதுவரை நான் அமைதியாக இருப்பேனா? என்று கேட்கும் நாயகியிடம், காதலிக்கும்போது இருவரும் முதல்முறை பாலுறவில் ஈடுபட்டபோது விமானத்தில் ரெக்கார்ட் செய்யப்பட்ட ஒலிநாடாவை நாயகன் ப்ளே செய்து கேட்கச் செய்கிறார். உடனே முகம் மலர்ந்து புளகாங்கிதம் அடைகிறார் நாயகி. இப்படியான காட்சியின் மூலம் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர்?

ஆல்ஃபா ஆண்: படத்தில் ஆல்ஃபா ஆண் என்றொரு பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. அதாவது விலங்குக் கூட்டங்களில் தன்னுடைய குழுவை பாதுகாக்கும், வேட்டையாடி இரையை கொண்டு வரும் விலங்கே ஆல்ஃபா என்று அழைக்கப்படுகிறது. பபூன்,சிம்பன்ஸி, கொரில்லா குரங்குகள், ஓநாய்கள் ஆகிய விலங்குகள் மத்தியில் இந்த ஆல்ஃபா ஆண்கள் உண்டு. படத்தின் ஆரம்பத்தில் இதை உதாரணமாக சொல்லி, தன்னுடைய விருப்பத்தை நாயகியிடம் தெரிவிக்கிறார் நாயகன். நன்கு படித்துவிட்டு அமெரிக்காவில் வேலையில் இருக்கும் மாப்பிள்ளையை மட்டம்தட்டி, தன்னை ஒரு ஆல்ஃபா ஆண் என்று நாயகியிடம் நிறுவுகிறார். போதாக்குறைக்கு கவிதை எழுதுபவர்கள் எல்லாம் கையாலாகாதவர்கள் என்று ஒரு முத்திரையையும் குத்துகிறார். இந்த காட்சியை பார்க்கும் ஒரு பதின்பருவ இளைஞனுக்கு ஆல்ஃபா ஆண் என்பவன் ஒரு பெண்ணிடம் இப்படித்தான் நடந்து கொள்வான். தன்னை சுற்றி இருக்கும் சமூகத்தை இப்படித்தான் அணுகுவான் என்ற சிந்தனை உருவாகாதா?

ஒரு பக்கம் இந்த படத்தின் மீது விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் இளம் தலைமுறை ரசிகர்களில் பலர் அது குறித்த எந்த கவலைகளும் இன்றி இதில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளையும், ஆணாதிக்க கருத்துகளையும் ஸ்டேடஸ்களாக வைத்து கொண்டாடவும் செய்கின்றனர். ’அனிமல்’ படத்தில் இடம்பெற்றுள்ளது போன்ற நச்சுக் கருத்துகள் காலம் காலமாக இந்திய திரைப்படம்க்களில் பூடகமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்று வருபவை தான். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக ஒரே படத்தில் இவ்வளவு வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் வைக்கப்படுவதும், அது பாக்ஸ் ஆஃபீஸில் இமாலய வெற்றி பெறுவதும் தான் மிகுந்த அச்சம் தருவதாக உள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »