கம்பளாவுக்கு அவசர சட்டம் கோரி 200 எருமைகளுடன் கர்நாடகாவில் பேரணி

கம்பளாவுக்கு அவசர சட்டம் கோரி 200 எருமைகளுடன் கர்நாடகாவில் பேரணி

கர்நாடக மாநிலத்தில் கம்பளா போட்டியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி எருமைக் காளைகளுடன் போராட்டக்காரர்கள் இன்று பேரணி நடத்தினர்.

பெங்களூர்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மாநில அரசு சார்பில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகத்தில் நீதிமன்ற உத்தரவால் தடைபட்டுள்ள, பாரம்பரிய கம்பளா விளையாட்டை (எருமைப் பந்தயம்) நடத்த அனுமதி அளிக்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் போன்று, சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடத் தொடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி தட்சிண கன்னட மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர், பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மூடாபித்ரியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் சுமார் 200 எருமைக் காளைகளுடன் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து 4 கிமீ தூரம் பேரணியாகச் சென்று கடற்கரை பகுதியில் உள்ள கம்பளா டிராக்கில் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

பேரணியின்போது கம்பளாவுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.

கம்பளா தொடர்பான வழக்கு தற்பொது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 31-ம்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Author Image
murugan