Press "Enter" to skip to content

சென்னையில் 144 தடை உத்தரவு: மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நாளை முதல் பிப்.12-ம் தேதி வரை அமல்

சென்னையில் மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நாளை முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னையில் ஒருவார காலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நிறைவுநாளில் வன்முறை வெடித்தது. இதில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும், போலீசாரின் நடவடிக்கை குறித்தும் காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர் இன்று விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டுக்காக முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் குறித்த போராட்டக்காரர்களிடம் விளக்கினோம்.

ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் இயற்றப்பட்டும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. போராட்டத்தில் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். போராட்டத்தில் இருந்து கலைந்து சென்ற சிலர் தடியடி நடத்தியதாக தவறான தகவலை பரப்பினர். மாணவர்கள் காவல்துறை சொல்வதை கேட்டு போராட்டத்தை கைவிட விரும்பினார்கள்.

போராட்டத்தில் இருந்த ஒருசிலர் குடியரசு தினத்தை நடத்தவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இருந்தனர். மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை. போராட்டத்தை ஒருசிலர் கைவிடாமல், மாணவர்கள் சிலரை செல்லவிடாமல் தடுத்தது கண்டறியப்பட்டது. போராட்டக்காரர்கள் குழுவை அழைத்துச்சென்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போராட்டத்தை வாபஸ் பெற விடாமல் சிலர் தடுத்தனர்.

காவலர்கள் யாரிடமும் லத்தி கொடுக்கப்படவில்லை. பலப்பிரயோகம் செய்யக்கூடாது என உறுதியாக இருந்தோம். குப்பத்தில் இருந்து வந்த சிலர் கற்கள், பெட்ரோல் குண்டு வீசியவுடன் தான் பிரச்சனை தொடங்கியது. அவசரச்சட்டம் இயற்றப்பட்டும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை.

இந்நிலையில் மெரினாவில் மீண்டும் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால், மெரினா, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், படடினப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் நாளை முதல் (ஜனவரி-29) பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.