Press "Enter" to skip to content

எதிர்க்கட்சியினர் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டனர்: கோவா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

கோவா தேர்தலில் பா.ஜ.க.விற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் எனவும், எதிர்க்கட்சியினர் அவர்களது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் பிரதமர் மோடி இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

பனாஜி:

கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ.க.வானது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகிறது.

பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து இன்று பானாஜியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சியினர் ஏற்கனவே தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டனர். அதனால், மக்களிடம் சொல்வதற்காக தற்போது சாக்கு போக்குகளை தேடி வருகின்றனர்.

பட்ஜெட் தேதிக்குள் தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் பட்ஜெட்டை தயாரிப்பதை விட கடினமாக எதிர்க்கட்சியினர் தேர்தல் பணியாற்றுகின்றனர். அதுவே, அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டதற்கான அறிகுறி. சில கட்சித் தலைவர்கள் பட்ஜெட் பற்றி எதுவுமே தெரியாமல் கையில் புள்ளி விவரங்களுடன் பட்ஜெட்டை விமர்சிக்க வந்து விடுகின்றனர். பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விடும்.

இன்னும் சில கட்சிகள் (ஆம் ஆத்மி) பிரதமர் அலுவலகம் தான் பஞ்சாப், கோவா சட்டசபை தேர்தல்களை ஒரே தேதியில் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக கூறி வருகின்றனர். தேர்தல் ஆணையம் மதிப்பு மிக்க ஒரு அமைப்பு. அதை அவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கோவா மாநில சுற்றுலா வளர்ச்சியை பாதிக்கவில்லை. கோவா மாநிலத்தில் பா.ஜ.க தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கோவாவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.