Press "Enter" to skip to content

மேற்கு வங்காளத்தில் ரூ.12 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்

வங்காளதேசம் நாட்டிலிருந்து மேற்கு வங்காளம் வழியாக இந்தியாவிற்கு கடத்தி வந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். இக்கடத்தல் சம்மந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் பேலியாகட்டா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் தங்கம் இருப்பதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே, தனிப்படை அமைத்து விரைந்து சென்ற அதிகாரிகள் அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.

வீட்டின் உள்ளே புகுந்த தனிப்படையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். 354 தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அதன் மதிப்பு சுமார் 12.8 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து தங்கக் கட்டிகளும் வெளிநாட்டு அடையாளங்களை கொண்டிருப்பதாகவும், வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்கு கடத்தி வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒரு நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.