Press "Enter" to skip to content

போலீசாரின் அலட்சியமான புலன் விசாரணையினால் 7 பேர் விடுதலை: ஐகோர்ட்டு தீர்ப்பு

திண்டுக்கல் டாக்டர் கொலை வழக்கு பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அலட்சியமாக விசாரணை நடத்தியுள்ளதால் 7 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை:

திண்டுக்கல்லில் பிரபல ஆஸ்பத்திரியை நடத்தி வந்தவர் டாக்டர் பாஸ்கரன் (வயது 71). இவருக்கு திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

இவர் தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, டென்னிஸ் விளையாட அங்குள்ள கிளப்புக்கு செல்வது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கிளப்புக்கு புறப்பட்டு சென்றபோது, அவரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. பின்னர், டாக்டர் பாஸ்கரனின் மனைவி மற்றும் மகனுக்கு போன் செய்து ரூ.5 கோடி கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

இதுகுறித்து திண்டுக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். இந்தநிலையில், 8 நாட்களுக்கு பின்னர் டாக்டர் பாஸ்கரனின் பிணம் கோவை, ஆனைமலை பகுதியில் உள்ள ஆழியாறு நதி பாலத்தின் கீழே, சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் இந்த வழக்கில் கார்த்திகேயன், சபீர்அகமது, உமர்முக்தர், சங்கர், முகிலன், மஞ்சு பார்கவி, ராஜ்குமார், துரைபாண்டி, விவேக் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் செசன்சு கோர்ட்டு, கார்த்திகேயன் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், மஞ்சு பார்கவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் வைத்து வழங்கினார்கள். அந்த தீர்ப்பில், நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

இந்த கொலை வழக்கு மிகவும் பரபரப்பான, முக்கியமான வழக்கு ஆகும். ஆனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரிவர விசாரிக்கவில்லை. அலட்சியமாக புலன் விசாரணையை நடத்திஉள்ளனர். வழக்கிற்கு முக்கிய ஆதாரம் எது? அந்த ஆதாரத்தை கொண்டு எந்த குற்றத்தை நிரூபிக்க முடியும்? ஆகியவை குறித்து சிந்திக்காமல், விசாரணை நடத்திஉள்ளனர்.

ஒரு டாக்டரை பணத்துக்காக கடத்திச் சென்று, கொலை செய்து, உடலை வீசுவது என்பது இருவர் மட்டும் செய்யக் கூடிய குற்றச்செயல் கிடையாது. இதில் பலருக்கு தொடர்பு இருக்கும். ஆனால், அவர்களது குற்றத்தை நிரூபிக்கும் விதமான ஆதாரங்களை, சாட்சிகளை உருப்படியாக போலீசார் சேகரிக்கவில்லை. அதனால், அவர்களை தண்டிக்க முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டுஉள்ளது.

இந்த வழக்கில் கார்த்திகேயன், சபீர்அகமது ஆகியோர் மீதான குற்றச்சாட்டு மட்டும் தான் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. போலீசாரின் அலட்சிய போக்கான விசாரணையினால், பிறர் தப்பித்துவிட்டனர். போலீசார் மட்டுமல்ல இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றமும், அரசு வக்கீலும் சட்டப்படி செயல்படவில்லை.

எனவே, கார்த்திகேயன், சபீர் அகமது ஆகியோருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். மற்றவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர். 

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.