Press "Enter" to skip to content

புகார் அளிக்க வந்த விவசாயியை தாக்கிய ஆய்வாளர்?

நாமக்கல் அருகே நிலப்பிரச்னை தொடர்பாக புகார் அளிக்க சென்றபோது காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விவசாயி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். 

நாமக்கல் அடுத்துள்ள திருமலைப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) செங்கோடன் என்பவருக்கும் ஏற்கெனவே நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இது சம்பந்தமாக நாமக்கல் நீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் செங்கோடன், சரவணனின் நிலத்தில் சாலை போட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கணேசனிடம் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் புகார் அளித்தார். அந்த புகார் மனுவை மீண்டும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசனே விசாரிக்க பரிந்துரை செய்து அனுப்பியதாக தெரிகிறது. 

இதையடுத்து மனுவை விசாரித்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசன், புகார் அளித்த சரவணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன் கூறுகையில், “காவல் கண்பாளரிடம் புகார் அளித்த பிறகு புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றபோது புகார் அளித்ததற்காக காவல் ஆய்வாளர் கணேசன் கம்பி, கட்டை உள்ளிட்ட பொருட்களால் என்னை தாக்கினார். நிலத்தினை செங்கோடனுக்கு விட்டு தருமாறும் வழக்கினை திரும்ப பெறுமாறும் வற்புறுத்தினார். 

இல்லையெனில் அடித்தே கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். அவர் என்னை தாக்கியதால் கால், கைகள், மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் காவல் ஆய்வாளர் கணேசன் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் கேட்டபோது, “ஆய்வாளர் அவரை தாக்கவில்லை. அவரை கைது செய்து விடுவார் என்ற பயத்தில் சரவணன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது குறித்து விசாரணை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.