சொந்தக் கதையைக் கூறி தற்கொலைக்கு முயன்றவரை சாமர்த்தியமாக மீட்ட காவலர்..!

சொந்தக் கதையைக் கூறி தற்கொலைக்கு முயன்றவரை சாமர்த்தியமாக மீட்ட காவலர்..!

போரூர் ஏரியிலுள்ள உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் காவலர் ஒருவர் சாமர்த்தியமாக பேசி இறக்கினார்.

போரூர் ஏரியில் உயர் மின் அழுத்த கம்பங்கள் உள்ளன. இந்தக் கம்பத்தின் மீது வாலிபர் ஒருவர் ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் நுண்ணறிவு பிரிவு காவல் துறை டார்வின் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது ஒருவர் மின்சாரக் கம்பத்தின் மீது நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே அந்த நபரிடம் கீழே இறங்கி வருமாறு அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் அந்த நபர் இறங்கி வர மறுத்தார். உடனே “இது போன்ற ஒரு விபத்தில் தனது தம்பியை பறிகொடுத்து விட்டதாகவும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இறங்கி வா பேசி தீர்த்துக் கொள்ளலாம்” எனவும் மிரட்டல் விடுத்த நபரிடம் சாமர்த்தியமாக காவல் துறைகாரர் பேச்சுக் கொடுத்தார். நீண்ட நேரமாக பேசிய பின்பு மின் கம்பத்தின் மேல் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மனம் மாற்றி கீழே இறங்கினார்.

இதுகுறித்து காவல் துறை விசாரணையில் தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் போரூர், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டி என்ற செல்லப்பாண்டி (32) என்பது தெரியவந்தது. இவர் அந்தப் பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இன்று அதிகாலை அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக குடிபோதையில் ஏரியிலுள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபருக்கு அறிவுரை வழங்கி அவரது மனைவியுடன் சமாதானம் செய்து காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை காவல் துறைகாரர் மிக சாமர்த்தியமாக பேசி மீட்டு கொடுத்ததால் அப்பகுதி மக்கள் அவரைப் பாராட்டி விட்டு சென்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh