மதுப்பிரியர்களால் ‘பார்’ ஆன பள்ளி – மாணவர்கள் கடும் அவதி..!

காஞ்சிபுரத்தில் மதுப்பிரியர்கள் பள்ளியை ‘பார்’ போன்று மாற்றியிருப்பதால் படிக்கும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிளியா நகர் கிராமத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வெளிமாநில மதுக்குவளைகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. மதுக்குவளைகளை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அவர் வயதான முதியவர் என்பதால், காவல்துறையினர் கைது செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. மதுவை வாங்கிச் செல்பவர்கள் அரசு பள்ளி வளாகத்திலேயே மது அருந்துகின்றனர். 

மதுவை அருந்தி விட்டு பாட்டில்களை பள்ளி வாளாகத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால், பள்ளி மது விற்கும் பார் போன்று காட்சியளிக்கின்றது. இந்த செயலால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் காவல் துறையினரிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai