‘எங்களை விழுப்புரத்தில் சேருங்கள்’ – பெரியசெவலை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

‘எங்களை விழுப்புரத்தில் சேருங்கள்’ – பெரியசெவலை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டி பெரியசெவலை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்தே திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய மக்கள் தங்கள் பகுதியை விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். 

போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. எந்தெந்த வருவாய் கோட்டங்கள், தாலுகா அலுவலகங்களை புதிய மாவட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் கள்ளகுறிச்சி, விழுப்புரம் மாவட்டம் எல்லை தொடர்பான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. 

அரசாணையில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தின் பெரும் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலேயே சேர்க்கப்பட்டது. ஆனால் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் இருந்த பெரியசெவலை, டி.கொளத்தூர், சரவணபாக்கம், ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்ததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அத்துடன் தங்களை மீண்டும் விழுப்புரம் மாவட்டதில் சேர்க்க வேண்டியும், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட திருவெண்ணெய் நல்லூர் தாலுக்காவில் இணைக்கக்கோரியும் பொதுமக்கள் நேற்று பெரியசெவலை கூட்டுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் தங்களை இணைக்கக்கோரி கோஷங்களையும் எழுப்பினர்.

பெரியசெவலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் 60 கி.மீ தூரம் என்பதும், விழுப்புரத்திற்கு 18 கி.மீ தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு முன்னர் ஒன்றிய அலுவலகமாக இருந்த திருவெண்ணை நல்லூர் ஒன்றிய அலுவலம், தற்போது வட்டாட்சியர் அலுவலகமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகம் பெரியசெவலையில் இருந்து ஒரு கி.மீ தூரம் என்பதும், புதிதாதக பிரிக்கப்பட்டதன் படி உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உளுந்தூர் பேட்டைக்கு பெரிய செவலையில் இருந்து 18 கி.மீ தூரம் ஆகும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh