20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு

20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு

20 ஆண்டுகளுக்கு முன்பே கடுமையான போராட்டத்துக்கு பிறகு அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலில் தமிழகத்தில் முதல் முறையாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலுரில் உள்ளது அகத்தீஸ்வர் திருக்கோயில். இந்த கோயில் வளாகத்தில் உள்ள திருமுத்தீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2000ம் ஆண்டு கரூர் பரசுபதீஸ்வர அர்த்த ஜாம அடியார் கூட்டமைப்பு, தமிழில் குடமுழுக்கு நடத்த விரும்பியது. அப்போது, கோயில் நிர்வாகிகள் தமிழில் குடமுழுக்கு நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
குடமுழுக்குக்கான திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டபோது தமிழிலில் குடமுழுக்கு செய்யக் கூடாது எனவும் ஆகம விதிப்படி சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனவும் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்த சுமார் 20 க்கும் அதிகமான அமைதிப் பேச்சுவார்த்தை அன்றைய மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழில்தான் குடமுழுக்கு நடத்துவோம் என சிவனடியார்கள் கூட்டமைப்பு உறுதியாக நின்றதால், இந்த விசயம் தமிழகம் முழுவதும் பரபரப்பானது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கரூருக்கு படையெடுத்தனர். குடமுழுக்கு நடத்துவதாக நாள் குறிக்கப்பட்ட முதல் நாள் வரை தமிழிலில் குடமுழுக்கு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. தமிழகம் முழுவதும் இருந்து வந்த சிவனடியார்கள், தமிழ் ஆர்வலர்கள், திருமுத்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் குவிந்து இருக்க கோயிலைச் சுற்றியும் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சிவனடியார்கள் கூட்டமைப்பை சேர்ந்த ராஜேஸ், முத்து என்ற சிவனடியார்கள் கரூரில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான டவர் ஒன்றில் ஏறினர். தமிழில் குடமுழுக்கு நடத்த அனுமதி அளித்தால்தான் கீழே இறங்குவோம் என போராட்டத்தில் ஈடுபட, ஒட்டுமொத்த கரூர் நகரமும் பரபரப்பானது. போராட்டம் தீவிரமானது. போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாமலை சம்வப இடத்துக்கு வந்து உறுதியளித்த பிறகு, இருவரும் டவரை விட்டு கீழே இறங்கினர். சிவனடியார்கள், தமிழ் ஆர்வலர்கள் உறுதியைக் கண்டு வேறு வழியில்லாமல், மாவட்ட நிர்வாகம் தமிழில் குடமுழுக்கு நடத்த அனுமதி அளித்தது. அன்றைய தினம் இரவே கோவையைச் சேர்ந்த மாணிக்க வாசகர் நற்பணி மன்றத்தை சேர்ந்த 15 சிவனடியார்கள் இருவேளை வேள்வி நடத்தி தமிழில் திருமுறைகள் பாராயணம் செய்து குடமுழுக்கை நடத்தி வைத்து, தமிழகத்திலேயே அறநிலையத் துறையில் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலில் முதல் முறையாக தமிழில் குடமுழுக்கு நடத்தினர்.

அன்றைய தினம் பிற்பகலிலேயே ஆகம விதிப்படியும் குடமுழுக்கை செய்தனர். ‘காலையில் தமிழ்… மாலையில் சமஸ்கிருதம். போராடி தமிழில் குடமுழுக்கை நடத்தினோம். எங்கள் ஊரில் நடத்தும் திருமணங்கள், சுயமரியாதை திருமணங்களாக அல்லது தமிழ்முறைப்படிதான் திருமணங்கள் நடைபெறுகிறது’ என்றார் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்ட திருமுக்கூடலூரைச் சேர்ந்த தமிழ் திருமுருகானந்தம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh