‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை

‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை

சிறையில் இருப்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு உடனடி ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனக்கு ஜனவரி 30ந்தேதி திருமணம் நடக்க உள்ளதால், ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர் வெங்கடேஷ் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக கைதாகி, கடந்த 24 ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜனவரி 30 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. அதனால் தனக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணிடம், பேசியதில், அவருக்கு சம்மதம் என தெரியவந்துள்ளது.

திருமணம் என்பது மனுதாரர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். எனவே நாளை திருமணம் நடைபெற உள்ளதால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் ஜாமீனில் யாரும் வெளியில் விடப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து மனுதாரருக்கு விலக்கு அளித்து, அவரை ஜாமினில் வெளியில் விட வேண்டும் என்று கும்பகோணம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh