வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

2002 முதல் 2005 வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளில் குறைபாடு இருந்ததாக வருமானவரித்துறை கூறியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனிடையே 2002 முதல் 2005 வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதில் 2002-03-ஆம் நிதியாண்டில் 2,63,00,000 ரூபாயை தெரிந்தவர்களுக்கு கடனாக கொடுத்திருந்ததாகவும், அதற்கு வட்டியாக 1.19 லட்சம் கிடைத்ததாகவும், அந்த வட்டிக்கான வரியை செலுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது. 2004- 2005ம் ஆண்டில் 1.71 கோடி ரூபாயை வாராக்கடனாக கணக்கு காட்டியதோடு, 33.93 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ரஜினி வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டியுள்ளார்.

இதனையடுத்து வாராக்கடனை கணக்கு காட்டுவதற்காகவே ரஜினி வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறாரோ என வருமான வரித்துறையினர் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது பதில் அளித்த ரஜினி, தாம் வட்டிக்கு கடன் வழங்கும் தொழிலில் இல்லை என கூறியுள்ளார்.

ஆனால் இதன் பிறகு வருமானவரித்துறைக்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த் தாம் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலைத்தான் செய்துவருவதாகவும், அடமானத்திற்கு கடன் வழங்குவதை மட்டும்தான் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் என தாம் நம்பியிருந்ததால் வருமானவரித்துறையினர் விசாரணையின் போது தவறான கருத்தை தெரிவித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். 
இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் 2004-2005-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்தார். அதில் ஏற்கெனவே வாரக்கடனாக கணக்கு காட்டிய 1.71 கோடி ரூபாயை வசூலிக்க தாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த ஆண்டுக்கான தமது வருவாய் 1.46 கோடி ரூபாய் என தெரிவித்தார். ஆனால் அவர் வட்டி தொழில் செய்துவருவதாக கூறியதை ஏற்க மறுத்த வருமானவரித்துறை அதிகாரிகள் அவர் கைமாற்றாக கடன் அளித்ததாக கூறி அவ்வாறு வழங்கப்படும் கடன் மூலம் பெறப்படும் வட்டி பிற வழிகளில் பெறப்படும் வருவாய் என்றுதான் கணக்கு காட்டமுடியும் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh