“அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

“அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், முன் ஜாமீன் கேட்டு மருதாசலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளை பதிவிட்டு அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக டிஜிபி, சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் சமூக வலைதள குற்றங்களைப் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தண்டபாணி, இதுபோன்று சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்க முறையான நடைமுறை ஏதும் இல்லை என தெரிவித்தார். இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது எனவும் தெரிவித்தார்.
எனவே, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல் நிலையங்களிலும் 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
இதன்மூலம் அரசியலைமைப்பு பதவிகள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பயம் போவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு சாதாரண மனிதனும் தான் ஒரு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்கும் என்பதற்காக இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும், தன்னுடைய பதிவை ரத்து செய்வதாக கூறியதாலும், செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதாலும் மருதாசலத்துக்கு முன் ஜாமின் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh