“இதுவரை தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

“இதுவரை தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “சுகாதாத்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து இதுவரையில் 242 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பொது சுகாதாரத்துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரையில் கொரோனா வைரஸின் பாதிப்பு யாருக்கும் இல்லை. மக்கள் பீதியோ, அச்சம் அடையவோ தேவையில்லை. அதே வேளையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விமல் என்ற மாணவர் சீனாவில் இருந்து வந்தவர்தான். ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, அவரை பரிசோதித்ததில் அவருக்கு இருந்தது சாதாரண சளித் தொந்தரவு தான் என்பது கண்டறியப்பட்டது. அதேபோல கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை.

மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் உள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தபட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளது. தேவையான மருந்து மாத்திரைகளும் இருப்பில் உள்ளன. அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, கேரள மருத்துவ உயர் அதிகரிகளோடு தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். முகநூல் வாட்ஸ் அப்பில் வரும் தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரபூர்வமாக அரசு தரும் தகவல்களை மட்டும் மக்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பொதுமக்கள் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த பழக்கத்தை ஏற்படுத்தினால் தொற்று நோய் பரவுவதை தடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh