நிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் வரவேற்பு; ஸ்டாலின் கடும் விமர்சனம்

நிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் வரவேற்பு; ஸ்டாலின் கடும் விமர்சனம்

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பும், திமுக தலைவர் ஸ்டாலின் வேதனையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழகம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது. விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சி மேம்பாடு ஆகியவற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்.
நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு சேர்க்க வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் குற்றச் சம்பவங்களை குறைப்பதிலும் நமது நாட்டிற்கே முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. இதனால் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைகழகம் ஆகியவற்றில் ஒன்றினை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும். தனிநபர் வருமான வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தனி நபர்களுக்கு நிவாரணம் அளித்து பொருள் நுகர்வை உயர்த்தும் என எதிர்ப்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பட்ஜெட் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜக விரும்பும் கலாசாரத் திணிப்பைச் செய்யும் பட்ஜெட்டாக இருப்பது வேதனை அளிக்கிறது. பட்ஜெட்டில் அர்த்தமுள்ள திட்டங்கள் எதையும் காண முடியவில்லை. கீழடி ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றை திருத்தவும் திரிக்கவும் முயல்வதை தமிழகம் சகித்துக் கொள்ளாது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிர வேறு எந்த அறிவிப்பும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை. திட்டங்களும் கிடைக்கவில்லை. நிதிநிலை அறிக்கை முழுவதும் கார்ப்பரேட்களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh