பிரான்சிலிருந்து திரும்பிய மகனை சொத்து தகராறில் அடித்துக் கொன்ற தந்தை

பிரான்சிலிருந்து திரும்பிய மகனை சொத்து தகராறில் அடித்துக் கொன்ற தந்தை

விடுமுறைக்காக பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்த மகனை சொத்து தகராறில் தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித் பிரெஞ்சு குடியுரிமை பெற்று, அவரது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி விடுமுறைக்காக ரஞ்சித் தனியாக புதுச்சேரி வந்துள்ளார். பிரான்சிலிருந்து வந்ததில் இருந்தே தனது தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குமார் சொத்தை பாகம் பிரித்து பிறகு பணம் தருவதாக ரஞ்சித்திடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்த ரஞ்சித், தினந்தோறும் குடித்துவிட்டு தனது தந்தையிடம் பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரஞ்சித், தந்தையிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

மேலும் தனது தாயை தலையணையால் அழுத்தி தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை குமார், கரப்பான்பூச்சி மருந்தை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்து, கீழே விழுந்த ரஞ்சித்தின், கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, இரும்பு கம்பியால் ரஞ்சித்தின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரஞ்சித், அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தாக தெரிகிறது. மகனை கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்திற்கு தந்தை குமாரே புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் ரஞ்சித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Author Image
Sneha Suresh