Press "Enter" to skip to content

பங்கு வணிகத்தில் சாமானியனும் சாதனையாளர் ஆகலாம்!

பங்குச் சந்தை என்றாலே அது சூதாட்டம்; நஷ்டம்தான் அதிகம் வரும்; படித்த, முதலீடு குறித்து நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்; சாதாரண, குறைந்த வருவாய் உள்ளவர்களால் ஜெயிக்க முடியாது; சந்தையில் நிகழும் ஏற்ற, இறக்கங்களை முதலீட்டு நிறுவனங்களால் மட்டுமே தாங்கவும் முடியும், லாபமும் பார்க்க முடியும்… போன்ற தவறான எண்ணங்கள் பெரும்பாலானோரிடம் உள்ளது. இதனால் பங்குச்சந்தை குறித்து தெரிந்துகொள்ள ஆர்வம் இருப்பது இல்லை.
இதனால் ஏதாவது முதலீடு செய்ய வேண்டும் என கருதினால், வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் வைப்புத் தொகை, தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் வாங்குதல், வீட்டு மனை என, அவரவருக்கு இருக்கும் பொருளாதார சூழ்நிலையைப் பொருத்து தங்கள் சேமிப்பை திட்டமிடுகின்றனர். துணிந்த சிலர் தங்களிடம் இருக்கும் பணத்தை அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து தங்கள் மூலதனத்தை அதிகரித்துக் கொள்கின்றனர். அதைவிட பல மடங்கு லாபம் தரக் கூடிய, முற்றிலும் பாதுகாப்பான, நேர்மையான, அதுவும் மிக எளிமையாக கணினிமய மூலமாக வர்த்தகம் மேற்கொள்ளக் கூடிய, பங்கு வர்த்தகத்தில் பலர் ஆர்வம் செலுத்துவதில்லை.
ஆனால், சாமானியனாலும் பங்குச் சந்தையில் சாதிக்க முடியும் என்பதே உண்மை! பேராசை, அச்சம், தயக்கம் இல்லாமல் இருந்தாலே பங்குச் சந்தையில் சாதித்துவிடலாம். இதில் ஒரே வர்த்தக நாளில் பங்கு பரிவர்த்தனை என்னும் இன்ட்ரா டே டிரேடிங், பியூச்சர் & ஆப்ஷன் என்னும் ஊக பேரம், கமாடிட்டி டிரேடிங் என்கிற பண்டங்களில் முதலீடு என பல்வேறு முறைகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. இவற்றில் லாபமும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பேராசையால் பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
பங்கு வணிகத்தை பொருத்த அளவில், நீண்ட கால முதலீடுதான் உறுதியான, பல மடங்கு லாபத்தை தரும். பட்டியலிடப்படாத பங்குகளில் கண்டிப்பாக முதலீடு செய்யக் கூடாது.
ஒரு நிறுவனப் பங்கின் முகவிலை ரூ.10 என்று இருக்கும் நிலையில், அதற்கும் குறைவான மதிப்புள்ள பங்குகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறையாவது வர்த்தகம் நடைபெறும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதே சிறந்தது. பங்குகளை அடிக்கடி வாங்கி விற்கக் கூடாது. இதனால் பங்கு தரகர்களுக்குத்தான் லாபமேயொழியே, முதலீடு செய்பவர்களுக்கு கிடையாது. 
நீங்கள் வாங்கிய பங்கு விலை குறையும்போது அச்சப்படத் தேவையில்லை. அதுதான் பங்குகளை நாம் வாங்குவதற்கு உகந்த நேரம். எனவே பங்கு விலை குறையக் குறைய வாங்கிக் கொண்டே இருக்கலாம்.
நிறுவனத்தின் செயல்பாட்டை நீண்ட கால அளவில் கணக்கிட்டு முதலீடு செய்வது நல்லது. குறுகிய கால ஏற்றம் -இறக்கம் கண்டு முடிவு செய்யக் கூடாது. 
வங்கி, ஆட்டோ மொபைல், மென்பொருள், பொறியியல், சுரங்கம், ஆயில் நிறுவனங்கள் என பல துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பகிர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இது லாப நஷ்டங்களை சம நிலைப்படுத்தும். ஆனால் அதிகபட்சம் 20 நிறுவனங்களுக்குள் முதலீட்டை வைத்துக் கொண்டால் அவற்றை கண்காணிப்பது எளிதாகும். ஒரே சமயத்தில் பணத்தை முதலீடு செய்வதை விட, சிறுக சிறுக முதலீடு செய்வது நல்லது. இதனால் பங்கு விலை சராசரியை சரியான முறையில் வைத்துக் கொள்ள முடியும்.
பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்வோருக்கு சில வரிச் சலுகைகள், தள்ளுபடிகளுக்கு வாய்ப்பு உண்டு. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வோர், ஊகத்தின் அடிப்படையில் முதலீடு செய்வோரைவிட அதிக லாபம் ஈட்ட முடியும்.

நிலம், தங்கத்தை காட்டிலும் சிறந்தது: வீடு, நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வதைக் காட்டிலும், பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும். தேவைப்படும்போது தங்கத்தை எளிதில் விற்றுவிடலாம்தான். ஆனால் பெரிய அளவில் லாபம் இருக்காது. வீடு, நிலம் விற்பனை என்பது மிக எளிதாக அமையும் என கூற முடியாது. நிலத்திற்கு மதிப்பு இருந்தாலும், அதை எளிதில் விற்க முடியாது.
ஆனால் பங்குச் சந்தையில் அப்படியில்லை. பங்குகளை மறுவிற்பனை செய்வது மிகவும் எளிது. முதலீட்டாளர்கள் வாங்குவதற்குத் தயார் நிலையில் இருப்பர். பங்கை விற்ற மறுநாளே நமது வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். அவரவர் முதலீட்டுக்கான லாப நஷ்டத்தைக் கணக்கிட்டு, பங்குகளை விற்பது எளிமையான நடவடிக்கை.

வாரிசுகளுக்கு சொத்தாக: இன்றைய சூழ்நிலையில் வாரிசுதாரர்களுக்கு நாம் வழங்க ஏற்ற மிகப் பெரிய சொத்து எதுவென்றால், பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து, அந்தப் பங்குகளை அவர்களுக்கு டிமேட் கணக்கில் மாற்றி வழங்குவதே ஆகும்.
பிறக்கும் ஒரு குழந்தைக்காக டிமேட் கணக்கு தொடங்கி, நன்றாகச் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால முதலீடு அடிப்படையில் வாங்கிக் கொடுத்தால், பல ஆண்டுகள் கழித்துஉயர் கல்வி, திருமணம், சொந்த தொழில் புரிய உள்ளிட்ட எந்த தேவைக்கும் பயன்படும் வகையில், அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து காணப்படும்.

Source: dinamani