Press "Enter" to skip to content

இந்தியாவை ஆள துடிக்கும் கார்ப்பரேட் Saudi Aramco! Saudi Aramco-க்கு முட்டு கட்டை போடுமா Reliance.!

செய்தி: Saudi Aramco நிறுவனம், இந்தியாவின் Reliance நிறுவனத்தின் 25% பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஏன் Saudi Aramco ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை வாங்கத் துடிக்கிறது. அதற்கு பின்னால் என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதைத் தான் விளக்கமாக பார்க்கப் போகிறோம்.

20-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து உலகின் மிகப் பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சக்தி என்றால் அது கச்சா எண்ணெய் தான். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பெரியண்ணன்கள் தவிர, கச்சா எண்ணெய் வைத்திருப்பவனும் தாதா லிஸ்டில் வளம் வர முடியும் என்கிற அந்தஸ்தைக் கொடுத்த பரம் பொருள் இந்த கறுப்பு கச்சா எண்ணெய் தான்.

இதற்கு 1973 – Energy Crisis ஒரு அருமையான சான்று. நேரம் கிடைத்தால் கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பாருங்கள், நிறையச் சொல்வார். சுருக்கமாக 1973-ம் ஆண்டில் அரபு நாடுகளுக்கும், இஸ்ரேல்-க்கும் (யூதர்களுக்கும்) இடையில் ஒரு 6 நாள் போர் நடந்தது. இதை யோம் கிபார் அல்லது அக்டோபர் யுத்தம் என்கிறர்கள் வரலாற்றாசிரியர்கள். நடந்த போரில் ரஷ்யா தவிர பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதர கொடுத்தார்கள். போரில் தோல்வியுற்ற அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து Organization Of Arab Petroleum Exporting Countries (OAPEC) அமைப்பு வழியாக எந்த வளர்ந்த நாட்டுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

சரிவு

1920-களிலேயே அமெரிக்காவின் மொத்த எரி சக்தியில் கிட்டதட்ட 65 சதவிகிதத்துக்கு மேல் கச்சா எண்ணெய் தான் ஒரே சோர்ஸ். அமெரிக்காவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை அவர்களே தயாரித்துக் கொண்டார்கள். ஆனால் விலை மத்தியக் கிழக்கு நாடுகளில் கிடைப்பதை விட அதிகம். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் பேரல் உற்பத்தி செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு மில்லியன் பேரல் என சரிந்துவிட்டது. Organization Of Arab Petroleum Exporting Countries (OAPEC)காலில் விழ வேண்டிய சூழல் உருவானது. ஆனால் விழ வில்லை நெஞ்சை நிமிர்த்தியது.

ரேஷன்

இந்த இக்கட்டான சூழலில் தான் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 3 டாலருக்கு விற்றுக் கொண்டிருந்த அரபு நாடுகள், அதிரடியாக 12 டாலருக்கு விற்கத் தொடங்கினார்கள். கச்சா எண்ணெய்யை வாங்கும் ஒவ்வொரு நாடும் அலறத் தொடங்கியது. அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கியதால் பணவீக்கம் உலகம் முழுக்க தலை யெடுக்க ஆரம்பித்தது. அனைத்து நாடுகளும் அரபு நாடுகளிடம் வேண்டு கோள் வைத்து கெஞ்சத் தொடங்கினார்கள். அரபு நாடுகளின் வலிமை உலகுக்கு புரியத் தொடங்கியது. ஆனால் அமெரிக்க எதையும் கண்டு கொள்லவில்லை. ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் பல கல்லெண்ணெய் (பெட்ரோல்) பங்குகளில் கல்லெண்ணெய் (பெட்ரோல்) இல்லை. வாகனங்கள் ஸ்தம்பித்துவிட்டன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. ஒரு கட்டத்தில் நம்மூர் ரேஷன் கடை போல கல்லெண்ணெய் (பெட்ரோல்) அளந்து அளந்து ஊற்றத் தொடங்கியது அமெரிக்கா.

கட்டுப்பாடுகள்

அமெரிக்காவில் 89 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பயணிக்க க் கூடாது, அமெரிக்காவின் எரிவாயு சிக்கனத்துக்காக ஒரு மணி நேரத்தை முன்னதாக மாற்றிக் கொண்டது, அதிக கல்லெண்ணெய் (பெட்ரோல்) குடிக்கும் கார்களுக்கு தடை, சிக்கனமான கல்லெண்ணெய் (பெட்ரோல்) செலவாகும் வரவு செலவுத் திட்டம் கார்களுக்கு சிவப்புக் கம்பளம், தேர்(கார்) போட்டிகளுக்கு தடை என தன்னைக் காத்துக் கொள்ள, அரபு நாடுகளிடம் கை ஏந்தி கச்சா எண்ணெய் வாங்காமல் இருக்க ரொம்பவே போராடியது அமெரிக்கா. அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றது.

அடிபணிதல்

அமெரிக்காவுக்கு ஓரளவுக்கு தேவையான கச்சா எண்ணெய்களை விநியோகம் செய்ய வெனிசுலாவும், கனடாவும் இருந்தன அதனால் அரபு நாடுகளிடம் மண்டி இடாமல் வண்டி ஓட்டியது. ஆனால் ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு யாருமே இல்லை. ஒருவழியாக பல்லைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு நாடாக இறங்கி வந்து “கச்சா எண்ணெய் வேணும், கொஞ்சம் அனுப்புங்க” என அரபிக்களிடம் கேட்கத் தொடங்கினார்கள். அரபிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தங்களையும் மதித்து மேலை நாடுகள் பணிகின்றன என்கிற சந்தோஷம். இறங்கி வந்த நாடுகளுக்கு சரிதான் சொல்லி கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்யத் தொடங்கினார்கள். கடைசி வரை அமெரிக்கா இறங்கி வரவில்லை.

எல்லாம் எண்ணெய்

அரபிகளுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது. கச்சா எண்ணெய் வெறும் எண்ணெய் அல்ல, அது வளத்தின் அடையாளம், அரபிகளின் பலத்தின் அடையாளம் என்பதை நன்கு புரிந்து கொண்டார்கள். இதை அமெரிக்காவும் அரபிகளுக்கு முன்பே புரிந்து கொண்டது தான் இங்கு பிரச்னை. அதனால் தான் இப்போது வரை கச்சா எண்ணெய் என்றால் உடனே அமெரிக்கா ஓடி வந்து பஞ்சாயத்து பேச தொடங்கிவிடுகிறது.

உதாரணமாக

அதற்கு சமீபத்திய உதாரணம், ஈரான் மீதான பொருளாதார தடை. ஈரான் மீது நவம்பர் 04, 2018-ல் இருந்து பொருளாதாரத் தடை இருக்கிறது. எனவே ஈரானிடம் யாரும் எந்த ஒரு ஏற்றுமதி இறக்குமதி உறவுகள் வைத்துக் கொள்ளக் கூடாது. அதை மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை பாயும். எனவே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் ஈரானிடம் போகாமல் இருக்க, மற்ற எண்ணெய் வள நாடுகளிடம் கச்சா எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்யச் சொல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அரசியல் கவனம்

அமெரிக்கா ஒரு நாட்டின் மீது கை போடுகிறது என்றால் அதில் லாபம் இல்லாமல் இருக்காது. 1950-கள் வரை எந்த அரபியைப் பார்த்தாலும் “யார்ரா நீ வெளிய போ” என உறுமிக் கொண்டிருந்தது. 1960-க்குப் பின், கச்சா எண்ண்ய்யின் புதையல்கள் இருப்பதை உறுதி செய்த பின், இரட்டைக் கோபுரத்தையே தவிடு பொடியாக்கி சவுதி அரேபியா (ஓசாமாவின் சொந்த நாடு சவுதி) உடன் கூட அமைதியாகப் பேசுகிறது என்றால் அதற்கு அவர்களிடம் இருக்கும் எண்ணெய் தான் காரணம்.

இன்னொரு 1973

இப்படிப் பேசிப் பேசி அரபு நாடுகளிலும் அமெரிக்காவுக்கு ஆதரவான சில இஸ்லாமிய நாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். சவுதி அரேபியா, துருக்கி, ஈராக், எகிப்து, குவைத் எல்லாம் இப்போதும் அமெரிக்க விசுவாசிகள். இந்த ஒரு புள்ளியைப் பயன்படுத்தி தான், 1973 போல மீண்டும் ஒரு கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டில் அமெரிக்கா (உலகம்) சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதையும் மீறி அரபு நாடுகள் ஒன்று சேர்ந்தால் ஏதாவது அரசியல் சித்து விளையாட்டுக்களை இறக்கிவிட்டு நான் உன்னைப் பாதுகாக்கிறேன் என களம் இறங்கிவிடுவார்கள் அமெரிக்கர்கள். அதற்கு ஈரான், ஈராக் போரே ஒரு பெரிய சான்று.

பரவிய முதலாளித்துவம்

அரபிகளுக்கு தங்களிடம் கச்சா எண்ணெய் இருப்பதால் தான் இந்த மரியாதை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கச்சா எண்ணெய் தான் அவர்கள் கஜானா என்பதும் புரிந்துவிட்டது. எண்ணெய் வணிகம் படுத்துவிட்டால் எல்லாமே காலி தான். எனவே தற்போது எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் Saudi Aramco. Saudi Aramco-வின் லாபம் சவுதி அரசின் கஜானா உண்டியல். இது வற்றினால் மீண்டும் சவுதி வெறும் பாலைவனம் தான். ஆகையால் இந்த நிறுவனத்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனும் வாழ்கைப் போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறது Saudi Aramco.

Saudi Aramco

ஏப்ரல் 2019 தொடக்கத்தில் தான் Saudi Aramco என்றொரு நிறுவனம் இருக்கிறது, இது தான் உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் எனும் செய்தி தெரிய வந்தது. Saudi Aramco-வின் நிகர லாபம் மட்டும் 111 பில்லியன் அமெரிக்க டாலர். இவர்களின் ஆண்டு வருவாய் (Revenue) 360 பில்லியன் டாலர். ஆக 100 ரூபாய்க்கு பொருள் விற்றால் 30.8 ரூபாயை நிகர லாபமாக பார்க்கிறார்கள். 2017 வரை ஆப்பிள் தான் ஜம்பமாக 50 பில்லியன் டாலர் நிகர லாபத்துடன் முதலிடத்தில் இருந்தது. அதை தூர எறிந்து விட்டு தற்போது நாற்காலியில் நச்சென உட்கார்ந்திருக்கிறது Saudi Aramco.

நிலைக்க வேண்டும்

Saudi Aramco நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டு 40 வருடங்கள் வரை எந்த ஒரு விஷயத்தையும் பொது வெளியில் சொல்லவில்லை. கப்சிப் என நிறுவனத்தை நடத்தினார்கள். இப்போது மட்டும் ஏன் வந்து சொல்கிறார்கள். காரணம் சவுதி அரேபியாவில் எண்ணெய் வயல்கள் வற்றிவிட்டன. Saudi Aramco நிறுவனத்தின் முக்கியமான கவார் (Ghawar) எண்ணெய் கிணற்றில் நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் பேரலுக்கு மேல் எடுத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் இப்போது என்ன முக்கினாலும் நாள் ஒன்றுக்கு 3.8 மில்லியன் பேரலுக்கு மேல் எடுக்க முடியவில்லையாம். எண்ணெய்க் கிணறு வற்றினால், Saudi Aramco நிறுவனம் வற்றி, சவுதி அரசே பணம் இல்லாமல் வற்றிவிடும்.

ஒரு கேள்வி

கேள்வி: இப்போது நாம் தான் Saudi Aramco நிறுவனம். நம்முடைய எண்ணெய் வயல்கள் வற்றிவிட்டது. இந்த 21-ம் நூற்றாண்டு முடியும் வரையாவது கச்சா எண்ணெய் நிச்சயம் தேவை. என்ன செய்வீர்கள்.
பதில்: வேறு எங்காவது கச்சா எண்ணெய் எடுக்க முடியும் என்றால், முறையாக அரசிடம் அனுமதி வாங்கி எண்ணெய் எடுக்கத் தொடங்குவோம்.
கேள்வி: அப்படி நான் நினைத்த படி எந்த நாட்டிலும் புகுந்து கச்சா எண்ணெய் எடுக்க முடியாது..! எடுக்க கச்சா எண்ணெய் கூட கிடையாது என்றால்..?
பதில்: ஏற்கனவே கச்சா எண்ணெய் எடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தோடு கூட்டு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.
கேள்வி: கூட்டு ஒப்பந்தம் மூலம் கச்சா எண்ணெய் எடுத்து வரும் லாபம் போதவில்லை என்றால் என்ன செய்வீர்கள்..?
பதில்: நம்மிடம் கச்சா எண்ணெய் எப்படி எடுக்க வேண்டும் என்கிற நிபுணத்துவம், டெக்னாலஜி இருக்கின்றன. அவைகளை விற்று ஆலோசனை சொல்லி காசு பார்ப்போம்.
கேள்வி: சரி, இந்த டெக்னாலஜி அவுட் சோர்ஸிங் மற்றும் கன்சல்டேஷன்கள் வழியாக வரும் லாபமும் போதவில்லை என்றால் என்ன செய்வீர்கள்..?
பதில்: மதிப்புக் கூட்டல். கச்சா எண்ணெய்யை தயாரிக்கும், நானே அதை சுத்தீகரித்து, ஏற்றுமதி செய்வேன். அதிக லாபம் கிடைக்கும்.
கேள்வி கேட்டவரின் பாராட்டுக்கள்: Exactly… அதைத்தான் செய்ய முயல்கிறது Saudi Aramco. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்கிறது

நானே எல்லாம்

மதிப்பு கூட்டல் என்போமே அதைத் தான் இப்போது செய்யத்தொடங்கி இருக்கிறது Saudi Aramco. வெறும் கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்வதை விட அதையே சுத்தீகரித்து விற்றால், இன்னும் லாபம் கூடும். அதில் உள்ள பெட்ரோ கெமிக்கல்களைப் பிரித்து விற்றால் இன்னும் லாபம் கூடும், அப்படியே சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் கடைசி வரை அனைத்து லாபத்தையும் Saudi Aramco நிறுவனம் மட்டுமே அனுபவிக்கும். அதைத் தான் செய்யப் போகிறார்கள். இதைச் செய்ய இந்தியாவிலும் பெரிய அளவில் பேசி வருகிறார்கள்.

திட்டம்

தன்னிடம் கச்சா எண்ணெய் எடுக்க அபரீவிதமான திறமை இருக்கிறது. தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் எண்ணெய் எடுக்க நிலம் தான் இல்லை. எனவே ஏற்கனவே பல்வேறு நாடுகளில் நல்லபடியாக எண்ணெய் எடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு தன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டு எண்ணெய் உற்பத்தியில் கால் பதிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆக ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தோடு போராட வேண்டியதை அந்த நாட்டு நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும். அந்த நிறுவனத்தின் பெயரில் புதிய தொழில்நுட்பங்களை இறக்கி வியாபாரம் பார்த்து கல்லா கட்டத் தொடங்கும் Saudi Aramco.

பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளில்

இந்த திட்டங்களை எல்லாம் எந்த நாட்டில் செயல்படுத்துகிறார்கள் தெரியுமா..? எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில். உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் முதலிடம் அமெரிக்கா. இரண்டாம் இடம் சீனா. மூன்றாம் இடம் இந்தியா. முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவிலேயே Motiva Enterprises LLC என்கிற சுத்தீகரிப்பு நிறுவனத்தை முழுவதுமாக வாங்கி தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. எண்ணெய் இறக்குமதி நாடுகளில் அமெரிக்கா சட்ட ரீதியாக ஏகப்பட்ட கெடுபிடிகள் என்றால், சீனா கொள்கை ரீதியாக பிரச்னை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியா

ஆனால் இந்தியா வெற்றிலை பாக்கு வைத்து தொழில் தொடங்க அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்தீகரிக்கப்படுகின்றன. வரும் 2040-க்குள் இந்த சுத்தீகரிப்பு அளவு நாள் ஒன்றுக்கு சுமார் 10 மில்லியன் பேரலாக அதிகரிக்கலாம் எனக் கணித்திருக்கிறார்கள். ஆக இந்தியாவில் தொடர்ந்து கச்சா எண்ணெய்க்கான தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின், கடந்த 2018-ல் Saudi Aramco நிறுவனம் இந்தியாவின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் சேர்ந்து மகாராஷ்டிரத்தில் நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சுத்தீகரிக்கும் பெரிய ஆலையை நிறுவப் போகிறார்களாம். இதில் 50% பங்குகளை Saudi Aramco நிறுவனமே வைத்துக் கொள்ளப் போகிறது.

சந்தையை உறுதி செய்

மேலே சொன்ன இந்தியா – சவுதி ஒப்பந்தப் படி புதிதாக தொடங்கப்படும் சுத்தீகரிப்பு காம்ப்ளக்ஸில் 50% கச்சா எண்ணெய்யை சவுதியே கொண்டு வருமாம். தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான விலை நிலையில்லாமல் இருப்பதை உணர்ந்து, எச்சரிக்கை உணர்வோடு, தான் எடுக்கும் கச்சா எண்ணெய்க்கு ஒரு வலுவான சந்தையையும் பிடித்துக் கொண்டது Saudi Aramco. ஏற்கனவே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சவுதி முதல் மூன்று இடங்களில் இருக்கிறது. ஆக இப்போது இந்தியாவில் Saudi Aramco நிறுவனம் சவுதி எண்ணெய்க் கிணற்றில் இருந்து எடுத்த கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு கப்பலில் கொண்டு வந்து சுத்தீகரித்து, இந்தியாவிலேயே விற்று லாபம் பார்க்கும். ஆம். இந்தியாவில் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போல கல்லெண்ணெய் (பெட்ரோல்) பங்கு அமைத்து, சில்லறை வணிக அடிப்படையில் கல்லெண்ணெய் (பெட்ரோல்), டீசலை விற்க Saudi Aramco மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

அரசியல் ஆதாயங்கள்

இந்த சில்லறை வணிகத்துக்கான அனுமதி மற்றும் சுத்தீகரிப்பு ஆலைகளுக்கான அனுமதிக்காகத் தான், இந்திய விருந்தாளிகளை, குறிப்பாக மோடியை புகழ்ந்து தள்ளுகிறார்கள் இந்த ஷேக் வியாபாரிகள். இந்திய எரிபொருள் சந்தையில் அழுத்தமாக கால் ஊன்றி விட வேண்டும் என்பதால் தான் வாய் நிறைய மோடியைப் புகழ்கிறார்கள், விருது கொடுக்கிறார்கள், இந்தியாவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள், மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்கிறார்கள்.

ஏன் இறக்குமதி நாடுகள்

எல்லாம் லாபத்துக்காகத்தான். சவுதியில் எடுக்கும் எண்ணெய்யை சவுதியில் வைத்தே சுத்தீகரித்தால், போக்குவரத்துச் செலவு, கல்லெண்ணெய் (பெட்ரோல்) மற்றும் டீசல் ஆவியாகும் நஷ்டம் என பலதும் தங்கள் தலையில் தான் வந்து விழும். அதனால் தான் வழக்கம் போல கச்சா எண்ணெய்யை இறக்குமதி நாடுகளுக்கு அனுப்பிவிட்டு, இறக்குமதி நாடுகளிலேயே சுத்தீகரிப்பு ஆலை அமைத்து, சில்லறை வணிக ரீதியில் விற்றால், செலவும் குறையும், பலே லாபம் பார்க்கலாம். ஆவியாதல் செலவுகள் குறைவதோடு, சில்லறை வணிகத்திலும் தன் இஷ்டத்துக்கு விலை வைத்துக் கொள்ளலாம். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை கொஞ்சம் ரியால்களில் கவனித்து விட்டால் மொத்த இந்திய சந்தையையே கூட எழுதிக் கொடுத்துவிடுவார்கள் தானே..?

புரிதல் தேவை

ஏன் தொடங்கும் போதே தனியாக தொடங்கக் கூடாது, Saudi Aramco நிறுவனத்திடம் இல்லாத காசா..? எனக் கேட்கிறீர்களா..? காசு எல்லாம் உண்டு. ஆனால் எந்த நாட்டில் அரசியல் சூழல் எப்படி மாறும் எனத் தெரியாது. அதனால் ஒவ்வொரு நாட்டின் எரிபொருள் கொள்கைகளை புரிந்து கொள்ள, அந்தந்த நாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் வியாபார சிக்கல்களை உணர, இந்த ஒப்பந்த காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, அதிகம் எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளில் சில்லறை வர்த்தகம் மிகப் பெரிய புதையல். அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முதலில் சக நிறுவனங்களின் போக்கு நடவடிக்கைகள், விலை நிர்ணயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள இந்த காலத்தை எடுத்துக் கொள்கிறது Saudi Aramco.

ஏன் ரிலையன்ஸ்

இப்படி ஒரு பக்கம் தானே களம் இறங்கி தனி சுத்தீகரிப்பு காம்ளக்ஸ்களை கட்டிக் கொண்டிருக்கும் போது, Saudi Aramco நிறுவனம் ரிலையன்ஸின் சுத்தீகரிப்பு வியாபாரத்திலும் நுழைய விரும்புகிறது. இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 25% பங்குகளை வாங்க பேசிக் கொண்டிருக்கிறது Saudi Aramco. ஏன்..? எனக் கேட்டால்… “தற்போது உலகிலேயே மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸின் சுத்தீகரிப்பு ஆலை தான். அங்கு நாள் ஒன்றுக்கு 1.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சுத்தீகரிக்க முடியுமாம். ரிலையன்ஸ் நிறுவனமே தன் சுத்தீகரிப்பு அளவை நாள் ஒன்றுக்கு 2.0 மில்லியன் பேரல்களாக உயர்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. உலகிலேயே இத்தனை பெரிய ஆலையை நடத்தும் நிறுவனத்துடன் இருந்தால் அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் உதவி, அரசை சரிகட்டும் ரகசியங்கள், ரிலையன்ஸ் பயன்படுத்தும் சில டெக்னாலஜி நுணுக்கங்கள், ரிலையன்ஸ் வைத்திருக்கும் ஏற்றுமதி வாடிக்கையாளர்கள் என அனைத்தயும் Saudi Aramco-வால் கண்காணிக்க முடியும் கவர முடியும்” என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

ரிலையன்ஸின் நிதி நிலை

ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டாம். இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம். இந்திய அரசுக்கு ஒரு தனிப்பட்ட இடத்தில் இருந்து மட்டும் சுமார் 40 – 50 சதவிகித வரிகள் வருகிறது என்றால் அது ரிலையன்ஸிடம் இருந்து தான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2017 – 18 காலத்தில் மொத்த வருவாய் 3.13 லட்சம் கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் 33,612 கோடி ரூபாய். Saudi Aramco நிறுவனத்தின் 7.7 லட்சம் கோடி ரூபாய் நிகர லாபத்தில் வெறும் ஐந்து சதவிகிதம் தான். தற்போதைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 60 – 65 பில்லியன் டாலராக இருக்கிறதாம். எனவே இதில் 10 – 15 பில்லியன் டாலர் அளவிலான பங்குகள் மட்டும் விற்கப்படலாம் எனவும் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

நெகட்டிவ் பயம்

செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோவைத் தொடங்கி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா என பல நிறுவனங்களின் பிழைப்பை மொத்தமாக கெடுத்துவிட்டது. இப்போது ஏர்டெல் வோடாஃபோனின் பிழைப்பை தான் கெடுத்தது போல Saudi Aramco ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வியாபாரத்தை மொத்தமாக கெடுத்துவிடுமோ..? எனவும் யோசித்து வருகிறதாம். அப்படி ஒருவேளை சவுதி களம் இறங்கினால் தன்னுடைய 7.7 லட்சம் கோடி ரூபாய் லாப பணத்தை மட்டுமே வைத்து மொத்த இந்திய சந்தையையும் காலி செய்து விடும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 35,000 கோடி ருபாயை வைத்துக் கொண்டு Saudi Aramco நிறுவனத்தை எதிர்க்க முடியாது என்பதையும் ரிலையன்ஸ் தரப்பினர் கணக்கிட்டு வருகிறார்களாம்.

இப்படியும் செய்யலாமே

தற்போது ரிலையன்ஸின் கவனம் முழுக்க ஜியோவை ஒரு பிரம்மாண்ட நிறுவனமாக வளர்த்தெடுப்பதில் தான் இருக்கிறது. ஆக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு சின்ன பகுதி பங்குகளை விற்று வரும் பணத்தை ஜியோவின் கடன்களை அடைக்கவும், ஜியோவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யவும் பயன்படுத்திக் கொள்ளாமா..? எனவும் பேசி வருகிறார்களாம். ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தில் 53 சதவிகித பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தனி நபர்கள், பொது முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என பலரும் வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 47% பங்கைத் தான் அம்பானி வைத்திருக்கிறாரார். ஆக Saudi Aramco ஒரு 10% பங்குகளை வாங்கினால் கூட ரிலையன்ஸின் முடிவுகளுக்கு முட்டுக் கட்டை போட முடியும் எனவும் பயப்படுகிறார்களாம்.

வணிகம் இலக்கு

இப்போதே Saudi Aramco தயாரிக்கும் கச்சா எண்ணெய்யில் மூன்றில் ஒரு பங்கு Saudi Aramco-வின் சுத்தீகரிப்பு ஆலைகளிலேயே சுத்தீகரிக்கபடுகிறதாம். இப்படி Saudi Aramco நிறுவனத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தங்களில் இயங்கும் நிறுவனங்கள் சேர்த்து நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சுத்தீகரிக்கிறார்களாம். இது இன்றைய நிலவரம். அடுத்த 2030-ம் ஆண்டுக்குள் Saudi Aramco தன் சுத்தீகரிப்பு அளவை நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் பேரல்களாக அதிகரித்துக் கொள்ள இலக்கு நிர்ணயித்திருக்கிறதாம். சுருக்கமாக அடுத்த 10 ஆண்டுக்குள் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனமாகவும் உருவெடுக்க காய் நகர்த்தி வருகிறது Saudi Aramco. Saudi Aramco-வின் வணிகம் இலக்குடாக இந்தியாவும், இந்தியாவின் கல்லெண்ணெய் (பெட்ரோல்) மற்றும் டீசல் சில்லறை வணிகமும் Saudi Aramco-வின் கண்ணில் பட்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »